வடக்கில் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும்; சந்திரிகா உறுதி
வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தியிலுள்ள இராணுவத்துக்கு தேவையற்ற அனைத்துக் காணிகளிலும் பொதுமக்கள் குடியேற்றப்பட்டு மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உறுதியளித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வளலாய் பகுதியில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதியிடம் உரையாடிய போதே அவர் இந்த உறுதியை வழங்கியதாக மாவை எம்.பி கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் வைத்துள்ள காணிகளில் விவசாயச் செய்கையில் இராணுவத்தினர் ஈடுபடுவதுடன், ஹோட்டல்களும் நடத்தி வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன்.
விவசாயம் செய்கின்றமை மற்றும் ஹோட்டல்கள் கட்டுவதை இராணுவத்தினர் மறுத்துள்ளதாக சந்திரிக்கா குறிப்பிட்டார். இது தொடர்பில் ஆராய்வதாகவும் அவர் கூறினார். மீள்குடியேற்றம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து பிரதேசங்களிலும் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் என்று கூறிய உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
அத்துடன், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தோலகட்டி, வடமுனை, தென்முனை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அவருக்கு கூறினேன். மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸுடன் சென்று அவற்றை அவருக்கு காட்டுமாறு சந்திரிக்கா கூறினார். அதற்கிணங்க அந்த காணிகளை அவருடன் சென்று காட்டியதாக' மாவை கூறினார்.
வடக்கில் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும்; சந்திரிகா உறுதி
Reviewed by NEWMANNAR
on
March 23, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 23, 2015
Rating:


No comments:
Post a Comment