முன்னாள் போராளிகளுக்கான உதவித் திட்டம்! விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு
வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள், விதனைகள் ஆகியோருக்கு உதவும் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை 45 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாகாண கிராமிய அபிவிருத்தியமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தின் இறுதியில் மேற்படி செயற்றிட்டத்திற்கான முன்மொழிவுகளை மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் வடமாகாணசபையில் கோரியிருந்த நிலையில், இவ்வருடம் தைமாதம் தொடக்கம் மேற்படி செயற்றிட்டத்திற்கான விண்ணப்பங்கள் மேற்படி வகைப்பாட்டிலுள்ள மக்களிடமிருந்து கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் சுமார் 45 ஆயிரம் விண்ணப்பங்கள் கிராமிய அபிவிருத்தி அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றிருப்பதாக மாகாண அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் நிலையில் மேலும் 2 வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மேற்படி வகைப்பாட்டிலுள்ள மக்கள் தங்கள் விண்ணப்பங்களை எமக்கு அனுப்பிவைக்கலாம்.
இந்தச் செயற்றிட்டம் ஒரு புறமிருக்க புதிய அரசாங்கத்தினாலும் இவ்வாறான செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிந்திருக்கின்றோம். அவ்வாறான செயற்றிட்டம் வடமாகாணசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டத்தை, எவ்வகையிலும் பாதிக்கப்போவதில்லை. என்பதுடன் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது சில இடங்களில் புலனாய்வாளர்கள் மற்றும் இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் இருந்த போதும் அவ்வாறான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் ஆட்சிமாற்றத்தின் பின்னர், குறைந்திருப்பதாக அறிகின்றோம்.
எனவே இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்த முழுமையாக விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்க வேண்டியிருக்கின்றது. எனவே மக்கள் தங்கள் விண்ணப்பங்கள் எமக்கு உடனடியாக கிடைக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இந்த விண்ணப்பங்களை எங்கே பெறுவது என சிலர், குழம்பிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய விண்ணப்பங்களை மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான நிதி முழுமையாக சேகரிக்கப்படுகின்றது எனவே மக்களுடைய ஒத்துழைப்பே இப்போது அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கான உதவித் திட்டம்! விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 14, 2015
Rating:

No comments:
Post a Comment