அண்மைய செய்திகள்

recent
-

"பேருந்தில் கைது செய்யப்பட்டு, காட்டில் கொல்லப்பட்டனர்"-Photos


ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்து உள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஏழுபேர் ஆந்திர மாநில எல்லையில் கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநில வனப்பகுதியில் செம்மரம் கடத்தியவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு, ஷேஷாச்சலம் வனப்பகுதியில் செவ்வாய்க் கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் உடல்கள் திருப்பதியில் உள்ள ரூயா அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமையன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
கொல்லப்பட்டவர்களின் உறவினர்களைக் கண்டறியும் பணியில் ஆந்திர மாநில காவல்துறையினருடன் இணைந்து தமிழக காவல்துறையினரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமையன்று மதியம் இரண்டு மணியளவில், கொல்லப்பட்டவர்களில் 7 பேரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்கள் ஏழு பேரும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள அர்ஜுனாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
'நகரியில் கைதுசெய்யப்பட்டனர்'
திங்கட்கிழமைன்று பிற்பகலில் ஆந்திராவில் கூலி வேலை செய்வதற்காக திருவண்ணாமலையிலிருந்து 8 பேர் பேருந்தில் புறப்பட்டதாகவும் ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி என்ற இடத்தில் ஆந்திர காவல்துறையினர் இவர்களில் ஏழு பேரை பேருந்திலிருந்து இறக்கி கைதுசெய்ததாகவும் மீதமிருக்கும் ஒருவர் தப்பிவந்து தங்களிடம் தகவல் அளித்ததாகவும் அர்ஜுனாபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மரம் கடத்தும்போது தடுக்கவந்த காவல்துறையைத் தாக்கியதால் இந்தத் தொழிலாளர்கள் சுட்டுகொல்லப்பட்டதாக காவல்துறையினர் கூறுவது தவறான தகவல் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் சரியான இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.
கொல்லப்பட்ட முனுசாமி என்பவரின் உடலைப் பெற்றுக்கொள்ள வந்த அவரது தாயார், தன் மகன் கூலி வேலைக்காகவே ஆந்திரா வந்ததாக தெரிவித்தார்.
இன்று காலையில், கொல்லப்பட்டவர்கள் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில், ஆந்திராவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
மனித உரிமை அமைப்புகள் கேள்வி
சம்பவம் நடந்த பின்னணி குறித்து, மனித உரிமை அமைப்புகள் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
கொல்லப்பட்டவர்களின் அருகில் கிடக்கும் செம்மரக் கட்டைகள் பழையதாக இருப்பது, சில கட்டைகளில் எண் இருப்பது, கொல்லப்பட்டவர்கள் அனைவரும் மார்பிலும் தலையிலும் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, அவர்களது உடலில் கடுமையான காயங்கள் இருப்பது ஆகியவை பெரும் சந்தேகத்தை எழுப்புவதாக மருத்துவமனைக்கு வந்த மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.
தவிர, தப்பி ஓடியதாகக் கூறப்படுபவர்களில் ஒருவர்கூட கைதுசெய்யப்படாதது ஏன் என்றும் அவர்கள் கேள்வியெழுப்பினர்.
புதன்கிழமையன்று மாலையில், ஏழு பேரது உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தமிழக அரசுக்குச் சொந்தமான அமரர் ஊர்திகளில் இந்த உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
நீதிவிசாரணை கோரும் காங்கிரஸ்
சம்பவம் நடந்த இடத்துக்கு நான் நேரில் சென்று பார்த்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருப்பதி தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிந்தா மோகன், கொல்லப்பட்டவர்கள் அங்கே கொல்லப்படவில்லை என்றும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் சந்திரகிரிக்கு அருகில் அவர்கள் கொல்லப்பட்டு இந்த இடத்துக்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
இவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட இடத்தில் இரத்த அடையாளம் எதுவும் இல்லை என்றும், அவர்கள் சடலங்களுக்கு பக்கத்தில் இருந்த செம்மரக்கட்டைகள் எல்லாமே பழைய கட்டைகள் என்றும் அருகில் இருந்த செம்மரக்கட்டை கிடங்கில் இருந்து அவை கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
இது குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை கொண்டு விசாரிக்கவேண்டும் என்றும் அந்த நீதிபதியும் கூட ஆந்திர மாநிலத்தை சாராதவராக இருக்கவேண்டும் என்றும் தற்போது செய்யப்படும் பிரேதபரிசோதனைகளின் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்றும் திருப்பதி மாவட்ட ஆட்சியரும், ஆந்திர அரசும் இதில் மிகப்பெரிய அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





"பேருந்தில் கைது செய்யப்பட்டு, காட்டில் கொல்லப்பட்டனர்"-Photos Reviewed by NEWMANNAR on April 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.