சுன்னாகம் நீர் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் – சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்
சுன்னாகம் நீர் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் எனவும், மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதே வட மாகாண சபையின் நோக்கம் எனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த பிரச்சினையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினர் முயன்று வருவதாகவும், இது குறித்து வட மாகாண சபை அசமந்தப்போக்கில் செயற்படுவதாகக் காண்பிக்க முனைவதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு உண்மையானதும், பூரணமானதுமான நிரந்தர தீர்வினை காணும் பொருட்டு வட மாகாண சபையினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் ஆரம்ப கட்டமாக 9 பேர் கொண்ட தூய நீருக்கான விசேட செயலணியொன்று உருவாக்கப்பட்டு, அந்த குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆயினும், அதுவொரு இடைக்கால அறிக்கை மாத்திரம் என சுட்டிக்காட்டியுள்ள வட மாகாண முதலமைச்சர், இறுதி அறிக்கை வரும் வரை காத்திருப்பதே பொருத்தமான செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத இறுதிக்குள் இறுதி அறிக்கை கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், அதுவரை கிணறுகளில் இருந்து நீரைக் குடிக்காமல் இருப்பதே சிறந்தது எனவும் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் ஏதாவதொரு பிரச்சினையை கையில் எடுத்து அதன் மூலம் மக்களிடம் தமது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள முனைவது வழக்கமான விடயமென வட மாகாண முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அந்த வகையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை நோக்காகக் கொண்டு சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் குடா நாட்டு குடிநீர் பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு மக்களை, தேவைக்கு அதிகமாக பதட்டமடைய வைத்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பிரச்சினை தொடர்பில் அதிகளவில் பேசுவோர் அதற்கான தீர்வுத் திட்டங்களை முன்வைக்கவில்லை எனவும் நிரந்தர தீர்வினை காண்பதற்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே, இப்பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டுள்ள சூழலியலாளர்கள், துறைசார் வல்லுனர்கள், பொதுமக்கள் மற்றும் அமைப்புக்கள் இப்பிரச்சினை தொடர்பில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைப்பதே பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என தாம் கருதுவதாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக ஆளுனர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குடாநாட்டு நீர் பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ தமக்கு இல்லை எனவும், நிரந்தர தீர்வு காணும் வரை பொறுமையாக இருக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், தீர்வு கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தூய நீர் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.
சுன்னாகம் நீர் பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் – சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள்
Reviewed by NEWMANNAR
on
April 09, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 09, 2015
Rating:


No comments:
Post a Comment