
அமெரிக்காவில் வசிக்கும் 11 வயது இந்திய வம்சாவளி சிறுவன் மூன்று பாடங்களில் கல்லூரிப் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளான்.
கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் ஆபிரகாம், தாஜி ஆபிரகாம் தம்பதியரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவனான தனிஷ்க், பள்ளிக் கல்வி பெறாமல் வீட்டில் இருந்தவாறு பாடம் பயின்று வந்துள்ளான்.
7 வயதில் உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டு தேர்வில் வெற்றி பெற்ற இவனது சாதனைப் பற்றி அறிந்த அதிபர் பராக் ஒபாமா, சிறுவனுக்கு பாராட்டு கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனிஷ்க், கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்கன் ரிவர் கல்லூரியில், சுமார் 1800 மாணவர்களுடன் பயின்று, கணிதம், அறிவியல், வேற்றுமொழிப் பாடம் உள்ளிட்ட 3 பாடங்களில் பட்டதாரியாக உயர்ந்துள்ளான்.
அமெரிக்கன் ரிவர் கல்லூரியின் வரலாற்றில் இத்தனை இளம்வயதில் ஒருவர் பட்டதாரியானது இதுவே முதல்முறை என செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நிருபர்களிடம் எதிர்கால திட்டம் பற்றி தெரிவித்த தனிஷ்க், மருத்துவர் ஆக வேண்டும், மருத்துவ ஆராய்ச்சியாளராக வேண்டும் மற்றும் அமெரிக்காவின் அதிபராக வேண்டும் என்று தெரிவித்துள்ளான்.
மேலும், உலகின் அறிவாற்றல்மிக்கவர்கள் (ஐ.க்யூ) இடம்பெற்றுள்ள ’மென்சா’ கிளப்பில் நான்காம் வயதில் இருந்து தனிஷ்க் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment