ஒபாமாவின் காதல்! ஆட்சி செய்யும் அன்பு.....!
சிகாகோவில் உள்ள சிட்லி ஆஸ்டின் என்னும் புகழ் பெற்ற சட்ட நிறுவனம் ஒன் றில் மிஷேல் ராபின்சன் என்ற இளம் பெண், பணி புரிந்து வந்தார். அது 1989-ஆம் ஆண்டு ஜூன் மாதம்! அந்த நிறுவனத்தின் உயர்பதவியை ஏற்க, இளைஞர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார்.
மெலிந்த உருவம், வசீகரத் தோற்றம், உற்சாக மனது.. என்று இருந்த அந்த இளைஞரின் ஆலோசகராக மூன்று மாதம் பணிபுரிந்தார் மிஷேல்.
இருவருமே கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அலுவலகம் மட்டுமின்றி நிறுவனம் ஏற்பாடு செய்த பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவருடனேயே இருக்க வேண்டிய சூழல் மிஷேலுக்கு!
அப்போதுதான்.. நுட்பமான அறிவு கொண்ட மிஷேல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது அவருக்கு! 'இந்தப் பெண் என்னுடைய வாழ்க்கைத் துணையாக அமைந்தால்..' என்கிற ஆசையும் ஏற்பட்டது.
தன் மனம் கவர்ந்த மங்கையிடம் தன் காதலை வெளிப்படுத்தவும் செய்தார் அந்த இளைஞர். ஆனால், அடுத்த விநாடியே அந்த விருப்பத்தை நிராகரித்தார் மிஷேல்.
அன்று.. மிஷேல் என்கிற அந்த புத்திசாலிப் பெண்ணின் மனதைக் கவரும் வழி தெரியாமல் தவித்த அந்த நபர்தான்.. இன்று, ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனங்களையும் கொள்ளையடித்து, வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக.. அமெரிக்காவின் அதிபராக.. வீற்றிருக்கும் பாரக் ஒபாமா!
வியப்பில் புருவம் உயர்த்துகிறீர்கள்தானே! அந்த ஆச்சர்யத்துடனேயே தொடரலாம்.. வாருங்கள்!
மிஷேல் தன்னை நிராகரித்தபோதிலும் மனம் தளரவில்லை ஒபாமா! தன் அபரிமிதமான அன்பை அவருக்குத் தொடர்ந்து உணர்த்தியபடியேதான் இருந்தார். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாம்! ஒபாமாவே கரைக்கையில் மிஷேல் என்கிற இளம்பெண் எம்மாத்திரம்?
வேலையில் ஒபாமா காட்டுகிற ஈடுபாடு, சக மனிதர்களிடம் பழகுகிற தன்மை.. போன்றவற்றால் அவர் மீது ஏற்கனவே மிஷேலுக்கு இருந்த மரியாதை, காதல் என்கிற புது வடிவம் எடுத்தது.
ஒரு நாள்.. தன்னுடன் வெளியே வரும்படி ஒபாமா அழைக்க.. உற்சாகமாக சம்மதித்தார் மிஷேல். அந்த முன்னிரவில்.. சின்னப் புன்னகையுடன்.. மெல்லிய தலையசைப்புடன்.. ஒபாமாவிடம் தன் காதலைச் சொன்னார். வானமே வசப்பட்டது போல் பெருமிதம் கொண்டார் ஒபாமா!
அரசியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒபாமா, படிக்கிற காலம் துவங்கி, எளிய வர்க்கத்தினரது சமுதாய, பொருளாதார முன்னேற்றத்துக்காகப் போராடியவர். மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்ய வேண்டுமெனில், அரசியல்தான் அதற்கு சரியான களம் என்கிற எண்ணம் கொண்டவர். மிஷேலின் காதலும் தோழமையும் அண்மையும் அவரை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்தின. 'சாதனைகள் பல புரியும் தகுதி எனக்கு உண்டு' என்னும் நம்பிக்கை ஒளி பாய்ந்தது, அவருக்குள்ளே!
'ஹார்வர்ட் லா ரெவ்யூ' என்ற சட்டப் பதிப்பு நிறுவனத்தின் முதல் கறுப்பினத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒபாமா. மதிப்பு மிக்க இந்தப் பதவியை அடுத்து, சிகாகோ பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை கௌரவங்கள் மொத்தமும் அவரது கிரீடத்துக்கு இறகுகளாயின!
நாடி வந்த கௌரவங்களும் தேடி வந்த பதவிகளும் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டன! 90ம் ஆண்டு.. அரசியலில் நிதானமாக அடியெடுத்து வைத்த ஒபாமா, அடுத்தடுத்து படு வேகமாக முன்னேறினார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானவர், 96-ல் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சட்டசபைக்குத் தேர்வானார்.
இதற்கிடையே, 92-ஆம் ஆண்டு.. 3 ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு.. அக்டோபர் 3-ஆம் தேதி திருமண பந்தத்தில் இணைந்தனர் ஒபாமாவும் மிஷேலும். அன்பின் பரிசாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
'நிறைவான குடும்ப வாழ்க்கை' என்கிற பெரும் பலம் பின்னணியில் இருக்க, ஒபாமாவின் அரசியல் வாழ்க்கை ஒளி வீசத் துவங்கியது. அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 2004 தேர்தலில் வென்று அமெரிக்க மேல் சபை உறுப்பினராகப் பதவியேற்றார். மக்களை மனதில் கொண்டு, சீர்திருத்த நலச் சட்டங்கள் பலவற்றையும் அமல்படுத்தக் காரணமாக இருந்தார். 2007, பிப்ரவரி மாதம், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார்.
ஆனால், மிஷேலுக்கு அரசியல் ஆர்வம் துளியும் இல்லை. பிரசாரத்தில் சற்று சோர்வாகவே இருந்த மிஷேல் திடீரென்றுதான் விஸ்வரூபம் எடுத்தார்! ஊர் ஊராகச் சென்று, ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து, தீவிர பிரசாரம் செய்தார்.
''அரசியலில் விருப்பமில்லாத நீங்கள், திடீரென அரசியல் ஆர்வம் காட்டுகிறீர்களே.. ஏன்?'' என்ற கேள்விக்கு, சிரித்தபடி மிஷேல் அளித்த பதில் என்ன தெரியுமா? '' 'தேர்தலில் என் ஆதரவு வேண்டுமெனில், சிகரெட் புகைப்பதை உடனே நிறுத்துங்கள்' என்று அவரிடம் நிபந்தனை விதித்தேன். அவரும் உடனே புகைப்பதை நிறுத்தினார். நான் களம் இறங்கி விட்டேன்'' என்பதுதான்!
அந்த அளவுக்கு மனைவி மேல் காதல் கொண்டவர் ஒபாமா! அந்த நேசத்தில் நெக்குருகிப் போன மிஷேல், வெறிகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். 2008 நவம்பர் 4-ஆம் தேதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, பெரும் வெற்றி பெற்றார் ஒபாமா. இந்த சரித்திர வெற்றிக்குப் பின்னே ஒய்யாரமாக வீற்றிருந்தது.. அந்த சகாப்தக் காதல்!
2009 ஜனவரி, 20-ஆம் தேதி, அமெரிக்காவின் சர்வ வல்லமை படைத்த 44-வது அதிபராகப் பதவியேற்று, சரித்திரத்தில் தன்னைப் பதிவு செய்து விட்டார் ஒபாமா! அமெரிக்காவின் 'முதல் பெண்மணி'யாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்துள்ளார் மிஷேல் ஒபாமா.
அன்பால் நிறைந்த இவர்களின் ஆட்சியில் இந்த உலகம் பயனுறட்டும்!
ஒபாமாவின் காதல்! ஆட்சி செய்யும் அன்பு.....!
Reviewed by Author
on
June 15, 2015
Rating:

No comments:
Post a Comment