கட்சி யாப்பைக் காட்டி எம்.பி.க்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கு முனைந்தால் போராட்டம் வெடிக்கும்...
கட்சி யாப்பை காட்டி எம்.பி.க்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கு முனைந்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். நீதியின் உதவியை நாடுவோம் என மஹிந்த அணி ஆதரவாளர்களான வாசு, விமல், தினேஷ் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசியப் பட்டியலில் இடம் வழங்கியமை வெட்கித் தலைகுனியும் செயலாகும் என்றும் இவ்வணி தெரிவித்தது.
கொழும்பு, நாரஹேன்பிட்டி அபேராம விஹாரையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார எம்.பி., ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக அதன் அதிகாரத்தை கையிலெடுத்து சர்வாதிகாரமாக செயற்படுகின்றார்.
ஐ.தே.கட்சியுடன் இணைந்து தேசிய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சுதந்திரக் கட்சி எம்.பி.க்களை அச்சுறுத்துகின்றார். இதற்கு மத்தியிலும் சில எம்.பி.க்கள் தாம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் என முடிவெடுத்துள்ளனர்.
இம் முடிவை ஜனாதிபதி ஏற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பைக் காட்டி எம்.பி.க்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தி அவர்களின் சுதந்திரத்தை பறிக்க ஜனாதிபதி முயற்சித்தார். அதனை எதிர்த்து மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம்.
அது மட்டுமல்லாது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கும் தீர்மானித்துள்ளோம். எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு தேர்தல் முறை மாற்றம், கணக்காய்வாளர் நாயகம் தெரிவுக்குழு உட்பட தகவல் அறியும் சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எமது பங்களிப்பை வழங்குவோம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் வாக்களித்தனர். அதனை ஐ.தே. கட்சிக்கு தாரை வார்ப்பது மக்களின் ஆணையை மீறும் காட்டிக் கொடுப்புக்கு ஒப்பானதாகும். ரூபாவின் மதிப்பு குறைக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைக் கண்டுள்ளது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
விமல் வீரவன்ச எம்.பி.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக மக்களுக்கு கடமையை செய்ய முடியாவிட்டால் மாற்று அணியை உருவாக்குவோம் என இங்கு உரையாற்றிய விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்திற்கு முதுகெலும்பில்லாத சிலர் அடிமையாகியுள்ளனர். இதில் ‘‘விஷப்” போத்தலை ஐ.தே. கட்சிக்கு அருந்தச் சொன்ன டிலான் பெரேராவும் உள்ளடங்கியிருப்பது வெட்கக் கேடாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடம் கொடுத்தவர்களுக்கும், அதனை பெற்றுக் கொண்டவர்களுக்கும் ‘‘வெட்கம்” இல்லையென்றே கூற வேண்டும்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டு மேற்கொண்ட சதி நடவடிக்கைகள் காரணமாகவே ஐ.ம.சு. முன்னணிக்கு 10 இலட்சம் வாக்குகள் கிடைக்காமல் போனது. தேசியப் பட்டியல் இன்று அகதிகளின் முகாமாக மாறிவிட்டது.
தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெற்றது எனக் கூறப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி ஐ.தே. கட்சிக்கு சார்புத் தன்மையாக செயற்பட்டார். தேர்தல் நெருங்கும் போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிராகவும் ஐ.ம.சு. முன்னணிக்கு எதிராகவும் பல சதிகளை அரங்கேற்றினார். எனவே இத் தேர்தல் சுதந்திரமாக நடை பெற்றது எனக் கூற முடியாது என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
கட்சி யாப்பைக் காட்டி எம்.பி.க்களின் சுதந்திரத்தை பறிப்பதற்கு முனைந்தால் போராட்டம் வெடிக்கும்...
Reviewed by Author
on
August 25, 2015
Rating:

No comments:
Post a Comment