வன்முறையில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு...
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸாருக் கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலாக நடத்துவது அவசியமாகும். அதற்கிணங்கவே நாளை நடைபெறவுள்ள தேர்தலின்போது வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் அத்துமீறி வன் முறைகளில் ஈடுபடுபவர்களுக்கெதிராக பாதுகாப்பு பிரிவு உச்சகட்ட அதிகாரத்தைப் பிரயோகித்து தலையில் சுடுமாறும் தேர்தல் ஆணையாளர் பொலிஸாரை வேண்டியுள்ளார்.
தேர்தலின் போதும் தேர்தலின் பின்னரும் நாட்டின் அமைதி பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் வாக்காளர்கள் எதுவித கெடுபிடிகளுமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று சுதந்திரமான முறையில் வாக்களிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது தேர்தல் திணைக்களத்தின் கடமையாகும். அதற்கிணங்க அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய தேர்தல் திருத்தச் சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. எனவே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்கவே வன்முறையில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
எனவே வாக்காளர்கள் எந்தவொரு அழுத்தமுமின்றி சுதந்திரமாக தாம் விரும்பிய கட்சிக்கோ அல்லது தாம் விரும்பிய சுயேச்சைக் குழுவுக்கோ வாக்களிக்கலாம். அதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேவைப்படுமிடத்து பொலிஸார் இராணுவத்தினரின் உதவியினை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் வன்முறைகள் இடம்பெறலாம் என சந்தேகிக்கப்படும் பிரதேசங்களில் விசேட அதிரடிப்பிரிவினை நடமாடும் சேவையில் ஈடுபடுத்தவும் பொலிஸ் மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
வன்முறையில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு...
Reviewed by Author
on
August 16, 2015
Rating:

No comments:
Post a Comment