இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம் ; பிரதமர் ரணில்...
எக்காரணம் கொண்டும் இந்திய மீனவர்கள் எமது கடற்பிராந்தியத்திற்குள் நுழைந்து மீன்பிடிக்க அனுமதி வழங்கமாட்டோம். அதே வேளையில் மன்னார் நகரம் இந்தியாவிற்கு அருகாமையில் இருப்பதால் இந்திய பொருளாதார உதவியுடன் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து செல்வோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஐ.தே.க.வின் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் நகர் தனியார் பஸ் நிலையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
அதிகார மமதை, ஆட்சியை துஷ்பிரயோகம் செய்தல், இனவாத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்தல் போன்ற கைங்கரியங்களை ஏற்படுத்திய ராஜபக் ஷவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியை உருவாக்கினோம். குறிப்பாக நூறு நாள் வேலைத்திட்டத்தை ஏற்படுத்தினோம். அதிகமானவர்கள் நூறு நாள் திட்டத்தை எவ்வாறு நடைமுறைபடுத்துவார்கள் என கேள்வி எழுப்பினார்கள். அந்த நூறு நாட்களுக்குள் எரிபொருளின் விலையை குறைத்தோம், பொருட்களின் விலையை குறைத்தோம், சம்பளங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட எத்தனையோ முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதேவேளையில் இனங்களுக்கிடையில் ஓர் சமத்துவத்தை ஏற்படுத்தினோம். பிரிவினை கலாசாரத்தை முறியடித்தோம். அவ்வாறான விடயத்தில் றிசாட் பதியுதீன் எம்மோடு இணைந்து செயற்பட்டார்.
இப்போது நாங்கள் ஒரு புதிய பாராளுமன்றத்தை உருவாக்க இருக்கிறோம். மகிந்த ராஷபக் ஷவிற்கு வாக்களிப்பதில் எந்த பிரியோசனமும் இல்லை அவர் பிரதமராக வந்தால் இன, மத வாதத்தை தோற்றுவிப்பார். எங்களுக்கு தேவை 60 மாதங்களேயாகும். இதற்குள் நாம் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இதற்காக நாங்கள் மன்னார் மக்களுக்கு அழைப்பு விடுகின்றோம். எங்களுக்கு 8 மாவட்டங்களில் அதிகமான பலம் இருக்கின்றது.
எங்களுக்கு அந்த ஆட்சியை உருவாக்கும் போது வடக்கிலும் எங்களுக்கு ஆதரவு இருக்கவேண்டும் என விரும்புகின்றோம். அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டுதான் அபிவிருத்தியை செய்ய முடியும். இதனால் தான் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு உங்களை கேட்டுநிற்கின்றோம். நாங்கள் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்போம். அத்துடன் இன,மத ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்துவோம்.
தலைமன்னாரில் உள்ள மத ஸ்தானங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கடற்படையினர் கூறினர். இந்து கலாசார அமைச்சராக இருக்கின்ற சுவாமிநாதனிடம் இப்பகுதியில் உள்ள இந்து கோவில்களை எல்லாம் கண்காணிக்கும்படி அவரிடம் சொன்னேன். சில கோவில்களுக்கு நாங்கள் பணம் வழங்கி இருக்கின்றோம் எதிர் காலத்திலும் ஏனைய கோவில்களுக்கு பணங்கள் வழங்க இருக்கின்றோம். மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீஸ்வரம் கோவிலை இந்த நாட்டில் உள்ள பிரதான கோவிலாக அபிவிருத்தி செய்ய நான் அமைச்சர் சுவாமிநாதரிடம் கூறியுள்ளேன்.
இதேபோன்று கிறிஸ்தவ அமைச்சிக்கு பொறுப்பாக இருக்கின்ற ஜோன் அமரதுங்கவிடம் மடு ஆலயத்தையும் ஒரு சிறந்த தலமாக உயர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன். அவ்வாறே முஸ்லிம் மதத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சரிடமும் முஸ்லிம் பள்ளிவாசல்களின் புனரமைப்பதற்கான உதவிகளையும் வழங்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். மீனவர்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்திய மீனவர்களுக்கு நாங்கள் ஏற்கனவே அறிவுரை கூறியிருக்கின்றோம்.
எங்கள் கடற்பரப்புக்குள் இழுவைப்படகு மூலம் மீன் பிடிக்க சந்தர்ப்பம் வழங்கமாட்டோம் என்று. அதேபோன்று இந்திய அரசாங்கமும் எங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது சிறிய காலத்திற்கு ஆள் கடலில் மீன்பிடிக்க அனுமதி கேட்டது. நேரசுசி போட்டு மீன்பிடிக்க அனுமதி கேட்ட போதும் நாங்கள் அனுமதி வழங்கவில்லை. இந்த கடற்பிரதேசம் எங்களுக்கு சொந்தமானது எங்கள் பகுதியில் எங்கள் மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்குவோம் என்றார்.
இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கமாட்டோம் ; பிரதமர் ரணில்...
Reviewed by Author
on
August 01, 2015
Rating:
Reviewed by Author
on
August 01, 2015
Rating:


No comments:
Post a Comment