நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கொத்மலையில் 5 ஏக்கர் காணி...

நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்துவிட வேண்டும் என்பது எனது நீண்ட கனவாகும். அந்த வகையில் தற்பொழுது கொத்மலை கொலப்பத்தான தோட்டத்தில் ஐந்து ஏக்கர் காணி கிடைக்கப்பெற்றுள்ளது. பேராதெனிய பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். எதிர்வரும் தேர்தலின் பின் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் நுவரெலியா மாவட்ட ஐ.தே.க வேட்பாளருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற வர்த்தகர்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை அங்கு தெரிவித்தார்.
இராதாகிருஷ்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த 67 வருடங்களுக்கு பின் இந்நாட்டில் நடைபெறும் ஒரு நியாயமான தேர்தல் என்று நான் கூறுகின்றேன். இந்த தேர்தலில் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டமுடியாது. கட்டவுட் போடமுடியாது. பாதையில் கூட்டமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்ய முடியாது பொலிஸாரும் பக்கச்சார்பின்றி சுயாதீனமாக செயல்படுகின்றனர்.
நடைபெறவிருக்கும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் இந்நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அன்னம் சின்னத்திற்கு வாக்களித்தனர்.
முதலாவதாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வேண்டும். இரண்டாவதாக இந்த நாட்டில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக வேண்டும். மூன்றாவதாக மஹிந்த ராஜபக் ஷவை வீட்டிற்கு அனுப்பவேண்டும் என்றே வாக்களித்தனர். ஆனாலும் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் கதவால் வந்து தேர்தலில் போட்டியிடுகின்றார். இதற்கு இடம் கொடுப்பதா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இன்றைய ஜனாதிபதி சகல அதிகாரங்களையும் பாராளுமன்றத்திற்கும் பிரதமருக்கும் வழங்கியுள்ளதால் மஹிந்த தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக முயற்சி செய்கின்றார். தான் பாராளுமன்றத்தில் பிரதமராகிவிட்டால் தனது சகாக்களையும் தனது சகோதரர்களையும் உறவினர்களையும் பாதுகாத்து கொள்ளலாம் என்று நினைக்கின்றார். அதற்கு மக்கள் துணைபோகமாட்டார்கள்.
இந்நாட்டில் துஷ்பிரயோகம் போதைவஸ்து விற்பனையிலும் மது விற்பனையிலும் ஈடுபடுபவர்களை இல்லாமல் செய்து நல்லாட்சியை கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை மக்கள் ஜனாதிபதியாக்கியுள்ளார்கள். எனவே இந்நாட்டில் நல்லாட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமானால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் எல்லோரும் யானை சின்னத்திற்கு வாக்களித்து ஐக்கிய தேசிய கட்சியை வெற்றி பெற செய்யவேண்டும் என்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு கொத்மலையில் 5 ஏக்கர் காணி...
Reviewed by Author
on
August 01, 2015
Rating:

No comments:
Post a Comment