துளசி இலைகள் புற்றுநோயை போக்கும் என்ற செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு £ 25000 அபராதம்
துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகிய இவ்விரண்டும் புற்றுநோயை தவிர்க்கும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலை ‘யோகா பார் யூ’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பிய, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருபத்தி ஐயாயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ ஆலோசனை என்று தெரிவித்துள்ள பிரிட்டனின் ஒளிப்பரப்பு துறை கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இந்த தகவல் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் தோன்றிய மருத்துவர் பங்கஜ் நாராம் என்பவர், 11 துளசி இலைகளும் மூன்று கருப்பு மிளகுகளும் புற்றுநோய் வருவதை தவிர்க்கும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த மருந்தைத் தானே விற்பதாகவும் அவர் விளம்பரப்படுத்தியுள்ளார்.
புற்றுநோயை உருவாக்கும் உயிரணுக்களை கொல்லக்கூடிய சக்தி தான் பரிந்துரைச்செய்யும் மருந்தில் இருப்பதாகவும், இது புற்றுநோயையும் குடல் இறக்க நோயையும் கூட குணப்படுத்தும் என்று கூறினார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்த சில புற்றுநோயாளிகள் இவரது தகவலை நம்பி, தங்கள் எடுத்துவந்த மருத்துவ சிகிச்சையை ஒத்திப்போடவோ, நிறுத்தியிருக்கவோ கூடும் என்று ஆப்காம் கூறியுள்ளது.
75,000 புற்றுநோயாளிகள் தன்னிடம் சிகிச்சைபெற்றுவருவதாகத் தெரிவித்த அந்த நபர், இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார்கள் என்று அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட சில நோயாளிகள், 15 ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்திருப்பதாகவும் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக, விசாரணை ஒன்றை நடத்திய ஆப்காம், ஒளிபரப்புத் துறை விதிகளை இந்த நிகழ்ச்சி மீறியுள்ளது என்று தெரிவித்து, அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு 25,000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தற்போது ஆசிய தொலைக்காட்சி நிறுவனம் நிறுத்தியுள்ளது. இந்த ஹிந்தி நிகழ்ச்சியை ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒளிபரப்பும் நோக்கம் தமக்கு இல்லை என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அது தவறுதலாக ஒளிப்பரப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது.
துளசி இலைகள் புற்றுநோயை போக்கும் என்ற செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு £ 25000 அபராதம்
Reviewed by NEWMANNAR
on
August 02, 2015
Rating:

No comments:
Post a Comment