அஞ்சல் வாக்களிப்பில் அசமந்தம் வேண்டாம்
2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 3ம் திகதியில் ஆரம்பமாகின்றது.
தேர்தல் பணிகளில் அரச உத்தியோகத்தர்கள் கடமையாற்ற வேண்டியிருப்பதால், அவர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான ஒரு ஏற்பாடாக அஞ்சல்மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது.
அஞ்சல் வாக்களிப்புக்கான தேர்தல் திணைக்களத்தின் ஏற்பாடுகள் நிறையவே உண்டு. அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை அரச உத்தியோகத்தர்களுக்கு அனுப்பி வைத்தல், அஞ்சல் வாக்களிப்புக்குத் தகைமை பெற்றுள்ளதைத் தெரியப்படுத்துதல் என்றவாறான ஏற்பாடுகள் தேர்தல் திணைக்களத்தின் வேலைப்பளுவுக்கு மேலதிகமானதாகும்.
எனினும் அஞ்சல் வாக்களிப்பின் போதும் செல்லுபடியற்ற வாக்குகள் தாராளமாக இருப்பது வேதனைக்குரிய விடயம். அரச உத்தியோகத்தர்கள் அளிக்கின்ற வாக்குகளே செல்லுபடியற்றது எனும்போது, அரச பணியாளர்களுக்கே வாக்களிப்பது பற்றிய போதிய அறிவு இல்லை என்பது தெரிகிறது.
அதேசமயம் அரச உத்தியோகத்தர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வேண்டாவெறுப்புடன் வாக்களிக்கின்றனர் என்ற உண்மையையும் உணரமுடிகின்றது.
அரச உத்தியோகத்தர்களின் வாக்களிப்பு நூறு வீதமாக இருக்க வேண்டுமென்பதுடன் வாக்களிப்பில் செல்லுபடியாகும் வாக்குகளின் வீதமும் நூறாக இருப்பது கட்டாயமானதாகும்.
அரச பணியாளர்கள் அளிக்கும் வாக்குகளில் கணிசமான வாக்குகள் செல்லுபடியற்றது என்ற விடயம் இலங்கையில் உள்ள வாக்களிப்பு நடைமுறைகளும், தேர்தல் அமைப்புகளும் அரசியல்வாதிகளுக்கானதும், அரசியல்வாதிகளை மையமாகக் கொண்டதுமாகும் என்ற உண்மையையும் உணரவேண்டியுள்ளது.
ஜனநாயக நாட்டில் ஆட்சியமைப்பு என்பது தேர்தல் மூலமாகவே நடைபெறுகிறது. எனவே தேர்தல் விதிகளையும் வாக்களிப்பு நடைமுறைகளையும் மக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதுடன் மக்களுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
அஞ்சல்மூல வாக்களிப்பில் செல்லுபடியற்ற வாக்குகள் கணிசமாக இருக்குமாயின், பொதுத் தேர்தலின் போதான வாக்களிப்பில் செல்லுபடியற்ற வாக்குகளும் மிக உயர்வாக இருக்கும்.
சிலவேளையில் அஞ்சல் மூல வாக்களிப்பின் போதான செல்லுபடியற்ற வாக்குகளின் விகிதாசாரத்தைவிட, பொதுத் தேர்தலின் போதான வாக்களிப்பில் செல்லுபடியற்ற வாக்குகளின் விகிதாசாரம் குறைவாக இருக்குமாயின் அரச உத்தியோகத்தர் தெரிவில் எங்கோ தவறுகள் நடந்துள்ளன என்று அனுமானிக்க முடியும்.
ஆக, அஞ்சல்மூல வாக்களிப்பு நூறு வீதமும் செல்லுபடியான வாக்குகளைத் தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதை நிறைவேற்றுவது தொடர்பில் ஒவ்வொரு அரச திணைக்களங்களும் தத்தம் உத்தியோகத்தர்களுக்கு வாக்களித்தல் தொடர்பான விழிப்புணர்வை வழங்கினால் மிகவும் நல்லது.
அஞ்சல் வாக்களிப்பில் அசமந்தம் வேண்டாம்
Reviewed by NEWMANNAR
on
August 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 01, 2015
Rating:


No comments:
Post a Comment