இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைகிறது
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் அதிகரித்துள்ளதாக, மீனவர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள போதும், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்வதாகக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள புள்ளி விவரங்களில் இருந்து தெரியவருகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியாக உள்ளது. ஆனால், இந்திய அத்துமீறும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகம் என்று வடக்கு மாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
2013 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய 220 மீனவர்கள் 48 படகுகளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். இது 2014 ஆம் ஆண்டு அதிகரித்தது. இலங்கைக் கடற்பரப்பினுள் அத்துமீறிய குற்றத்துக்காக 477 மீனவர்கள் 99 படகுகளுடன் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரையில், 190 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 28 படகுகள் மாத்திரமே கைப்பற்றப்பட்டுள்ளன. அதிலும் 28 இந்திய மீனவர்கள் தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
'அதிகரித்த காற்றின் வேகம், பழுதான திசைகாட்டி, தற்செயலாக எல்லை தாண்டியுள்ளோம், படகு பழுதாகி எல்லை தாண்டிவிட்டோம்' என்ற காரணங்களையே கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் முன்வைக்கின்றனர் என்று கடற் தொழில் நீரியல்வளத் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.ஆனால், மீன்பிடிக்கும் நோக்குடனேயே அவர்கள் தெரிந்துகொண்டு கடல் எல்லை தாண்டி வருகின்றனர் என்று மீனவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் மீன்பிடி அனுமதிப் பத்திரம் இன்றி, எல்லை தாண்டி வரும் மீனவர்கள் 1979 ஆண்டு 59 ஆவது இலக்க, வெளிநாட்டு மீன்பிடி ஒழுக்க விதிச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுவர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தீர்மானத்துக்கு அமைய வழக்குப் பதிவு செய்யப்படும். எல்லை தாண்டப்பட்டிருப்பது நிரூபணமாகும் பட்சத்தில், ஒரு வருக்கு தலா 15 லட்சம் தண்டப்பணம் அறவிடப்படும். ஆனால் இரு நாடுகளின் எல்லை தொடர்பான பிரச்சினை என்பதால், கடந்த 3 வருடங்களிலும் எந்த உறுதியான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை, என்று கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைகிறது
Reviewed by NEWMANNAR
on
October 16, 2015
Rating:

No comments:
Post a Comment