மன்னார் கடலில் எண்ணெய் ஆய்வுக்கு கேள்விப் பத்திரம்
மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு, அரசு புதிய கேள்விப் பத்திரங்களைக் கோரவுள்ளது. மன்னார் கடற்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கான உரிமத்தைப் பெற்றிருந்த கெய்ன் இந்தியா நிறுவனம், இந்த மாதத்துடன் இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளது.
இந்த நிறுவனம் நான்கு கிணறுகளைத் தோண்டியபோது, எண்ணெய் வளம் ஏதும் கண்டறியப்படவில்லை. எனினும் இரண்டு கிணறுகளில் மாத்திரம் எரிவாயுப் படிமங்கள் கண்டறியப்பட்டன.
எனினும், அவற்றில் இருந்து வர்த்தக ரீதியான எரிவாயு உற்பத்தி செய்வது சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்ட நிலையிலேயே கெய்ன் இந்தியா நிறுவனம் இலங்கையில் தமது செயற்பாடுகளை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ளது.
இது தொடர்பாகக் கெய்ன் இந்தியா நிறுவனத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதன்படி, கெய்ன் இந்தியா நிறுவனம் மேற்கொண்ட 300 மில்லியன் டொலர் பெறுமதியான நிலஅதிர்வு ஆய்வு அறிக்கையை இலங்கை அரசு வைத்துக் கொள்ளும். இதற்குப் பதிலாக கெய்ன் இந்தியா நிறுவனம், இந்தப் பணியில் இருந்து இடையில் விலகிக்கொள்வதற்கு, இலங்கை அரசு அபராதம் எதையும் விதிக்காது என்று இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, அரசு மன்னார் கடற்படுக்கையில் உள்ள எண்ணெய் படிமத் துண்டங்களை விற்கச் சர்வதேச அளவில் கேள்விப் பத்திரம் கோரவுள்ளதாகப் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கெய்ன் இந்தியா நிறுவனம் இதிலிருந்து வெளியேறுகின்ற போதிலும், அரசுக்கு இழப்பு இல்லை. அவர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை எம்மிடம் உள்ளது. அந்த சாதகத்தன்மையை வைத்து, சர்வதேச அளவில் புதிய கேள்விப் பத்திரங்கள் கோரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் கடலில் எண்ணெய் ஆய்வுக்கு கேள்விப் பத்திரம்
Reviewed by NEWMANNAR
on
October 16, 2015
Rating:

No comments:
Post a Comment