அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் கைதிகளை நிபந்தனையின்றி அரசாங்கம் விடுவிக்க வேண்டும்! பதவி பறிபோனாலும் வலியுறுத்த வேண்டியுள்ளது! விஜயகலா


தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனையுமின்றி பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும். அரசாங்க கட்சியை சேர்ந்த நான் இவ்வாறு கூறுவதனால் எனது பதவி பறிபோகலாம். அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை என்று சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது சாத்தியமில்லை. அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என அரசாங்கம் எடுத்திருக்கும் முடிவு பற்றி வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

நவம்பர் 7ம் திகதிக்கு முன் சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என அண்மையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். அதுவே மனிதாபிமானமான நியதி.

அரசாங்க கட்சியிலிருக்கும் நான் இவ்வாறு கூறுவது ஒழுங்கை மீறுவதாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையிலும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற வகையிலும் இதைக் கூறித்தான் ஆகவேண்டும்.

நல்லிணக்க ஆட்சியின் தலைவராக விளங்கும் எங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைத்தால் இக்காரியம் பெரிய விடயமாக இருக்க முடியாது.

எங்கள் அரசியல் தமிழ் கைதிகள் தங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கோ குரல் கொடுப்பதற்கோ யாருமேயில்லையென இறுதி முடிவு கண்ட பின்பு தான் உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கினார்கள். நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களை சென்று பார்வையிட்டோம்.

நாங்கள் சென்றிருந்த வேளை கைதிகள், பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென்ற முடிவிலேயே இருந்தார்கள். அரசாங்கம் இவ்விடயத்தை எவ்வாறு பார்க்கிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அரசாங்கம் இவர்களுக்கு ஒரு நல்ல தீர்வை வழங்க வேண்டும்.

ஏனெனில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்த அப்பாவி கைதிகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார்கள். இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றால் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் கூட சிறைவாசத்தை முடித்துக் கொண்டு விடுதலை பெற்றிருப்பார்கள்.

இக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு தமது குடும்பங்களுடன் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கூடிய நல்ல தீர்வொன்றை அரசாங்கம் கொடுக்க வேண்டும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை சட்டம், நீதி என்பவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். அதை நாங்கள் விமர்சிக்கவும் முடியாது.

ஆனால் எங்களைப் பொறுத்தவரை நாங்கள் அரசியல்வாதிகள். மக்களின் நன்மை கருதியோ கோரிக்கைகளை முன்னிட்டோ செயல்பட வேண்டியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் நன்மை கருதி மற்றும் எமது இனத்தின் விடுதலை கருதி நாங்கள் பொது மன்னிப்பு வழங்குங்கள் என அரசாங்கத்தைக் கேட்கிறோம். அதேவேளை ஆளும் அரசாங்கக் கட்சியில் ஒரு உறுப்பினராக இருந்து கொண்டு பொது மன்னிப்பு என்ற விடயத்தை கோர முடியாது.

ஆனால் நான் அதற்கு அப்பால் மனிதாபிமான அடிப்படையில் இக் கோரிக்கையை முன்வைக்கின்றேன். ஒருவேளை நான் இவ்வாறு கூறுவதனால் எனது பதவி பறி போகலாம். அதற்காக நான் பயப்படவில்லை. கவலை அடையப்போவதில்லை. எவ்வாறு இருந்த போதிலும் தமிழ் அரசியல் கைதிகளை காப்பாற்றுவதே எனது நோக்கமாகும்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் காலதாமதமும் இழுத்தடிப்பும் இடம்பெறுவது உண்மை. எங்கள் அரசாங்க கட்சிகளில் இனவாதிகளும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் அமைச்சரவையில் கடுமையாக எதிர்த்திருக்கின்றார்கள்.

இவர்களைப் பொறுத்தவரை தேர்தல்களின் போது சிறுபான்மை மக்களின் ஆதரவு தேவை. ஆனால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததன் பின்னர் சிறுபான்மை இன மக்களைப் பற்றி எவ்வித கவலையுமில்லை, கரிசனையும் காட்டமாட்டார்கள். அடுத்த தேர்தல் வரும் வரை இதே நிலை தான்.

எனவே ஒரு சில இனவாதிகளின் சுயநலத்துக்காக அரசாங்கம் பாதகமான முடிவை எடுக்காது என்று நம்புகின்றேன். அதேவேளை அரசாங்கம் தன்னையும் பாதுகாக்க வேண்டும். மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

ஜனாதிபதி முடிவெடுத்தால் இந்த அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும். அவ்வாறு வழங்கினால் அதை யாரும் தடுக்கவும் முடியாது. அவர் தனது பிறந்த நாளை முன்னிட்டோ அல்லது சுதந்திர தினத்தை முன்னிட்டோ கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கலாம். துரதிர்ஷ்ட வசமாக அது கடந்து விட்டது.

ஜனாதிபதி பதவியேற்று 10 மாதங்கள் மாத்திரமே கடந்துள்ளமையால் இந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இருந்த போதிலும் எங்கள் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று நம்புகின்றேன்.

உண்மையான போராளிகள் என்று குற்றம் காணப்பட்டவர்கள் கடந்த அரசாங்கத்தில் சேர்க்கப்பட்டு, பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்று அவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவ்வாறு இருக்கும்போது சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்கள் சிறைவாசம் அனுபவிப்பது அபத்தமானது என்றார்.
தமிழ் கைதிகளை நிபந்தனையின்றி அரசாங்கம் விடுவிக்க வேண்டும்! பதவி பறிபோனாலும் வலியுறுத்த வேண்டியுள்ளது! விஜயகலா Reviewed by NEWMANNAR on October 31, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.