சவூதியின் ஷரியா சட்டம் இலங்கை பெண்ணுக்கு விதித்த தீர்ப்பை மாற்றுமா?
சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்பட உள்ள இலங்கையை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் தொடர்பில் மீள் விசாரணை நடத்தி புதிய தீர்ப்பு வழங்கப்படவிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சவூதியில் அமுலில் இருக்கும் சன்னி முஸ்லிம்களின் வஹாப்வாத ஷரியா சட்டத்தின் கீழேயே இந்த மூன்று பிள்ளைகளின் தாய்க்கு எதிராக கல்லெறிந்து கொலை செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சட்டத்தின் பிரகாரம் சாட்சியங்கள் விசாரிக்கப்படுவதில்லை. குறுக்கு விசாரணைகள் நடத்தப்படுவதில்லை. அறங்கூறுநர் சபை முன் விசாரணை நடத்தப்படுவதில்லை. இஸ்லாமிய நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பே இறுதியானது.
இந்த ஷரியா நீதிமன்றம் ஒரே தவறுக்கு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இருவேறு தண்டனைகளை வழங்குகிறது.
திருமணத்திற்கு பின்னர் வெளிநபருக்கு காதல் தொடர்பு வைத்திருந்த பெண்ணை கல்லெறிந்து கொலை செய்யுமாறு தீர்ப்பளித்துள்ள இந்த ஷரியா நீதிமன்றம் அந்த பெண்ணின் காதலுக்கு 100 கசையடிகளை தண்டனையாக வழங்குமாறு தீர்ப்பளித்துள்ளது.
இப்படியான நிலைமையில், மீண்டும் நடத்தப்பட உள்ள வழக்கு விசாரணையானது முதலில் நடத்தப்பட்ட விசாரணையை போல் நடத்தப்படும் புதிய விசாரணையாகும்.
விசாரணை முடிவில் கல்லெறிந்து கொலை செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்படுமேயன்றி வேறு தீர்ப்புகள் வழங்கப்பட வாய்ப்பில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சவூதியில் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பெண், இலங்கையின் கொழும்பு நகரில் பிறந்து வளர்ந்தவர். இலங்கையில் திருமணத்திற்கு பின்னர் வேறு நபருடன் காதல் தொடர்பை வைத்திருப்பது சட்டவிரோதமான குற்றமல்ல.
விவகாரத்து வழக்கொன்றில் மாத்திரம் அந்த தொடர்பு ஒப்புவிக்கப்பட்டால், விவகாரத்தை வழங்கக் கூடிய குற்றமாகும்.
இலங்கையின் சமூக கலாசார சூழலில் வாழ்ந்த இந்த பெண்ணுக்கு வஹாப்வாத சன்னி முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க இடமளிக்காது, அந்த பெண் செய்த தவறுக்கு வழக்கை இலங்கை நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கையை எடுக்காது, சவூதி அரசின் சட்டத்தை நாடாளுமன்றத்தில் வாசிப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்காது எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சவூதியின் ஷரியா சட்டம் இலங்கை பெண்ணுக்கு விதித்த தீர்ப்பை மாற்றுமா?
Reviewed by Author
on
December 13, 2015
Rating:

No comments:
Post a Comment