அண்மைய செய்திகள்

recent
-

நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்! இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்!


இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1945ஆம் ஆண்டு, 18ஆம் தேதி இரவு விமான விபத்தில் சிக்கி இறந்ததாக உறுதிபடுத்தப்பட்டத் தகவலை பிரிட்டனை சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து நேதாஜியுடன் பயணித்த மற்றொரு இந்திய தேசிய ராணுவத்தை சேர்ந்த ஹபீபூர் ரஹ்மான்கான் அளித்த தகவல்களையும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி நேதாஜியின் உடலை எரித்த பின்னர் அவர் எழுதி கடிதம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கர்னல் ஹபீபூர் ரஹ்மான்கான், இந்திய தேசிய ராணுவம், தைஹோகூவில் நடந்த விமான விபத்து தொடர்பாக எழுதிக் கொள்வது, '' கடந்த 16-8-1945ஆம் ஆண்டு காலை 10.30 மணியளவில் ஜப்பானை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.

சுபாஷ் சந்திர போஸ், சில அரசாங்கள் உத்தியோகஸ்தர்கள், இவர்களுடன் நானும் அந்த குழுவில் இருந்தேன். முதல் கட்டமாக சிங்கப்பூரில் இருந்து பாங்காங் நோக்கி ஜப்பானிய பாம்பர் விமானத்தில் பயணித்தோம்.

மதியம் 3.30 மணியளவில் பாங்காங் சென்றடைந்தோம். பின்னர் 17ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பாங்காங்கில் எங்களுக்காக இரு ஜப்பான் விமானங்கள் காத்திருந்தன.

ஒன்று இந்தியர்களுக்கு. நேதாஜி ,ஸ்ரீ ஐயர், கர்னல் கேலோனல் குல்ஷார் சிங், கர்னல் தீப்நாத் தாஸ், லெப்டினன்ட் கர்னல் பிரீதம் சிங், மேஜர் ஏ.ஹசன் மற்றும் நான் உள்ளடக்கிய 7 பேருக்கும் ஒரு விமானம்.

இந்திய சுதேசிய அரசுடன் ராணுவ நிர்வாகங்களை கவனிக்கும் ஜப்பானிய லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, சுதேசிய அரசுடன் அரசியல் விவகாரங்களுக்கான ஜப்பான் அமைச்சர் ஹெச். ஈ. ஹாட்சியா, ஆகியோர் மற்றொரு விமானத்தில் பயணித்தனர்.

அதே தினத்தில் காலை 10.45 மணிக்கு வியட்நாமில் உள்ள சைகூன் (தற்போது ஹோசிமின் ) போய் சேர்ந்தோம். அன்று மாலை லெப்டினன்ட் ஜெனரல் இசோடா, ஹாட்சியா, கர்னல் தாடா, நேதாஜிக்கு ஒரு தகவல் அளித்தனர். அதாவது ஜப்பான் புறப்படும் விமானத்தில் இரு இருக்கைகள் எஞ்சியிருக்கின்றன.

ஜப்பானுக்கு புறப்படத் தயாராகுங்கள் என்று கூறப்பட்டது. விமானத்தில் இருக்கைகள் இல்லாத நிலையில் எங்களுடன் வந்த சுதேசிய ராணுவ அதிகாரிகள் அங்கேயே தங்கி விட்டனர்.



நேதாஜி என்னை மட்டும் உடன் அழைத்துக் கொண்டார். சைகூனில் இருந்து மாலை5.15 மணியளவில் அந்த இரட்டை என்ஜீன் கொண்ட மிட்சுபிசி கே.ஐ- 21 ரக ஜப்பானிய பாம்பர் விமானம் புறப்பட்டது.

இரவு 7.45 மணிக்கு பிரெஞ்சு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த தரோன் நகரில் ( வியட்நாமில் உள்ள டா நாங் என்ற கடற்கரை நகரம் ) விமானம் தரை இறங்கியது.

அன்றைய இரவு அங்கேயே கழித்தோம். அடுத்த நாள் காலை அதாவது 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி காலை எங்கள் விமானம், தைவானில் உள்ள தைஹோகூ (தற்போது தைபே) நோக்கி பயணத்தை தொடங்கியது.

மதியம் 2 மணிக்கு அங்கு சென்றடைந்தோம். சுமார் 35 நிமிடங்கள் ஓய்வெடுத்தோம்.

தொடர்ந்து 2.35 மணிக்கு ஜப்பானை நோக்கி விமானம் புறப்படத் தொடங்கியது.

தைஹோகூ ஏரோ டிராமை விட்டு விமானம் மேலெழும்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விமானத்தின் முன் பகுதியில் இருந்து குண்டு வெடித்தது போல பெரும் சத்தம் கேட்டது.

விமான என்ஜீனில் உள்ள இறக்கை ஒன்று உடைந்து தொங்கியதால் ஏற்பட்ட சத்தம் அது. அடுத்த நிமிடமே தரையை நோக்கி விமானம் பாய்ந்தது. விமானம் தரையில் மோதியவுடன் முன்பக்கம் பின்புறமும் தீ பற்றத் தொடங்கியது.

விமானத்தில் நேதாஜி பெட்ரோல் டேங் அருகில் இருந்தார். நான் அவருக்கு அருகில் இருந்தேன்.

விமானத்தில் பற்றி எரிந்த தீக்கிடையே நாங்கள் வெளியேறினோம். முதலில் நான் வெளியே வந்தேன். எனக்கு பின்னால் நேதாஜி வந்தார்.

விமானத்தை விட்டு வெளியே வந்த நான் திரும்பி பார்த்த போது, நேதாஜியின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததை பார்த்தேன். நான் அவரது உதவிக்கு ஓடினேன். அவரது உடைகளை கழற்றினேன்.

ஆனால் அவருக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது. விமானம் கீழே விழுந்ததில் நேதாஜிக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

விமானம் தரையில் விழுந்த நேரத்தில் பெட்ரோல் டேங் வெடித்து அதில் இருந்த பெட்ரோல் நேதாஜி மீது சிதறியிருக்கலாம் என்பது என் கணிப்பு.

இதனால்தான் அவர் மீது தீ இலகுவாக பரவியிருக்கலாம் என்று கருதுகிறேன். எனினும் அருகில் இருந்த ஜப்பானிய மருத்துவமனைக்கு 15 நிமிடத்துக்குள் நேதாஜியை கொண்டு போய் விட்டோம்.

எனக்கும் உடல் எங்கும் தீக்காயங்கள், தலையில் பலத்த அடி பட்டிருந்தது. நேதாஜியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தோம். மருத்துவர்கள் தீவிரமாக போராடி பார்த்தனர்.

ஆனால் அன்று இரவு 9 மணியளவில் நேதாஜி மரணம் அடைந்து விட்டார். நேதாஜி இறப்பதற்கு முன்னால் மிகுந்த அமைதியுடன் இருந்தார்.

என்னிடம் பேசினால் கூட இந்திய சுதந்திரம் பற்றிதான் அவரது பேச்சு இருந்தது. தான் இறக்கும் தருவாயில் இந்தியாவின் சுதந்திரத்தை பற்றிதான் பேசிக்கொண்டுதான் இறந்ததாக தனது சகத் தோழர்களிடமும் அறிவிக்கச் சொன்னார்.

'' நான் கடைசி வரை இந்தியாவின் சுதந்திரத்துக்காகவே போராடினேன்.

எனது இறப்பும் அதே முயற்சிக்காகவே நிகழ்ந்துள்ளது. தோழர்களே கடைசி வரை போராட்டத்தை கைவிட்டு விடாதீர்கள் ''என்பதே நேதாஜி இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த இறப்பு செய்தி. இந்த விபத்தில் லெப்டினன்ட் ஷிடாய், மற்றும் இரு ஜப்பானிய காமெண்டர்களும் இறந்து போனார்கள்.

மற்றவர்கள் எல்லாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. நேதாஜி இறந்ததும் அவரது உடலை டோக்கியோவுக்கு அல்லது சிங்கப்பூருக்கோ கொண்டு செல்ல வேண்டுமென்று நான் வலியுறுத்தினேன்.

சிங்கப்பூர் கொண்டு செல்ல வேண்டுமென்பதே எனது நோக்கமாக இருந்தது. தேவையான உதவிகள் செய்யப்படுவதாக வாக்களிக்கப்பட்டது.

விரைவில் சவப் பெட்டிக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் விபத்து குறித்து சைகூன் மற்றும் டோக்கியோவுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக என்னிடம் கூறப்பட்டது.

நேதாஜி இறந்த 3 நாட்களுக்கு பிறகு, அதாவது 21ஆம் தேதி அவரது உடலை எடுத்து செல்வது சாத்தியமில்லை. எனவே அவரது உடலை தைஹோகூவிலேயே எரித்து விடுமாறு என்னிடம் தகவல் தரப்பட்டது. எனக்கும் வேறு வழி தெரியவில்லை.

நானும் அதனை ஏற்றுக்கொண்டேன். தொடர்ந்து 22ஆம் தேதி நேதாஜியின் உடலை ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் உதவியுடன் எரித்தேன். பின்னர் 23ஆம் தேதி நேதாஜியின் சாம்பலை சேகரித்தேன்.

நேதாஜியின் அஸ்தியை டோக்கியோவில் ஒரு இடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு, தக்க சமயத்தில் இந்தியா கொண்டு வரலாம் என்று எனக்கு அறிவுரை கூறப்பட்டது.

எதிர்பாராமல் நடந்த விபத்தின் உண்மை நிலவரம் இதுதான். நான் ஜப்பானிய அதிகாரிகளிடம் நேதாஜியின் அஸ்தியை பத்திரப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

அப்போதுதான் என் தேசத்தின் தன்னிகரற்ற தலைவனை ஒரு உண்மையான ஹீரேவை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள முடியும்.''

இப்படிக்கு,
கர்னல் .ஹபீபூர் ரஹ்மான்கான்
தைஹோகூ, தைவான்
24-8- 1945
நேதாஜி உடலை எரித்த கையுடன் உதவியாளர் எழுதிய கடிதம்! இறப்புக்கு காரணமான பெட்ரோல் டேங்க்! Reviewed by Author on January 17, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.