அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது! அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்...


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்கவேண்டும்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

"உங்களை யாரோ சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நீங்கள் மீண்டும் எங்களின் முதலமைச்சராக எங்களோடு இணைந்து பணியாற்றவேண்டும்" என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல், முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அமைச்சர்கள், அவைத் தலைவர் தவிர்த்து ஏனைய ஆளும் கட்சி உறுப்பினர்களால் நேற்றுமுன்தினம் இரண்டாவது தடவையாகவும் இந்தக் கூட்டம்
நடத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செயலகத்தில் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, யாழ்.நகரிலுள்ள தனியார் விடுதியில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தனித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். அதன் பின்னரே முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

கடந்த கூட்டத்தின் அறிக்கை முதலமைச்சரினால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் முதலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் திருத்தங்கள் சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. மேலும், அமைச்சரவையின் செயற்திறனின்மை அதனால் வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கிய நிதி திரும்பிச் சென்றமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டன.

மேலும் முன்னைய பிரதம செயலாளர் வேறு திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியை, உறுப்பினர்களுக்கு அதிகரித்து வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இப்போது அவ்வாறு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்படுகின்றது. உறுப்பினர்களுக்கு அதிகரித்த நிதி வழங்கப்படவேண்டும். உறுப்பினர்களுக்குரிய கெளரவம் வழங்கப்படவேண்டும் என்பதை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாகாண சபை உறுப்பினர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்கலாம் என்றும், அதில் எந்தத் தவறும் இல்லை எனவும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஒவ்வொரு உறுப்பினர்களையும் அவர்களுடைய பிரதேசம் சார்ந்து நியமிக்கவுள்ளேன். இது தொடர்பில் மத்திய அரசின் அதிகாரிகள் - மாகாண அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்துவேன். இதனூடாக உங்களுடைய பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளை நீங்களே முன்னெடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் வெளியாகிய செய்திகள் தொடர்பிலும் பேசப்பட்டது.

"முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது தொடர்பிலான சிந்தனையே எம்மிடம் இல்லை. நாங்கள் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஆதரவு தெரிவிக்கவே இங்கு ஒன்றாகக் கூடியுள்ளோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு வேறு தளங்களில் இயங்குவது சரியாகத் தென்படவில்லை.

நீங்கள் எங்களின் முதலமைச்சராக - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகப் பணியாற்றவேண்டும். உங்களை யாரோ சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நீங்கள் மீண்டும் எங்களின் முதலமைச்சராக எங்களோடு இணைந்து பணியாற்றவேண்டும்" என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்களின் முதலமைச்சராக இருந்து கொண்டு, எங்கள் ஒருவருக்கும் தெரியாமல், முதலமைச்சர் என்ற பெயரைப் பயன்படுத்தி வேறு அமைப்புகளின் கூட்டங்களுக்குச் சென்றமை மனவேதனையாக இருக்கின்றது என்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இதன்போது தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கள் - கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு நேரம் போதாமையினால், முதலமைச்சர் எதிர்வரும் 17 ஆம் திகதி மீளவும் கூட்டத்தைக் கூட்டி பதில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அன்றைய தினம் அமைச்சர்களையும் அழைத்து வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு முதலமைச்சர் வேறெங்கும் இயங்கக்கூடாது! அழுத்திக் கூறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள்... Reviewed by Author on January 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.