31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கவுள்ள நாடுகள்....
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது அமர்வின்போது உரையாற்றவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பேரவைக்கு விளக்கம் அளிக்கவுள்ளார்.
செய்ட் அல் ஹுசேன் தனது உரையில் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பான தனது குறுகிய விளக்கத்தை அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு எந்தவொரு தினமும் இதுவரை நிகழ்ச்சி நிரழ் அட்டவணையில் ஒதுக்கப்படவில்லை.
எனினும் நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றும்போது அவ்வப்போது இலங்கை குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என கூறப்படுகின்றது. அத்துடன் மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் தமது கருத்துக்களை முன்வைக்கவுள்ளன. ஏற்கனவே இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் ஒன்றை நிறுவவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் சார்பில் ஜெனிவாவில் உள்ள இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் 31 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள், முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் குறித்து இம் முறை 31 ஆவது கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடுகளினால் விரிவாக ஆராயப்படவுள்ளது.
31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்து பிரஸ்தாபிக்கவுள்ள நாடுகள்....
Reviewed by Author
on
February 29, 2016
Rating:

No comments:
Post a Comment