தலைவர் பிரபாகரனுக்கு பிடித்த விளையாட்டு உதைபந்தாட்டம்!
தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரனுக்கு அதிகம் பிடித்த விளையாட்டுக்களில் உதைபந்தாட்டம் முதன்மை பெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளி உருத்திரபுரம் மகாவித்தியாலயம் அமரர் சந்திரகாந்தன் கமலாவதி ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிகள் இன்று பிற்பகல் 3 மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி மீ.இதயதாஸ் தலைமையில் இடம் பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இங்கு உரையாற்றிய அவர்,
வாழ்க்கை என்பது வெறுமனே வீரத்தோடும் அல்லது உரைகளோடும் அல்லது விளையாட்டோடும் முடிந்துவிட்டதல்ல. அதற்குப்பின்னாலே பெரிய சரித்திரங்கள் இருக்கின்றது.
ஒவ்வொன்றுக்குப்பின்னாலும் பல கதைகள் இருக்கின்றன.
இன்றைய வரலாற்று நிகழ்வான இந்த உதைபந்தாட்ட நிகழ்வு இந்தப்பாடசாலை வரலாற்றிலே ஒரு நாளிலே குறிப்பிடப்படும். இந்த நிகழ்வு பெரிய கதையைச் சொல்லியிருக்கின்றது.
இதைப்போல எத்தனை ஆயிரம் பேரை இந்த மண்ணிலே நாங்கள் இழந்திருக்கிறோம். நாங்கள் பொட்டல் வெளிகளைத்தாண்டி மன்னாரிலே இருந்து மெல்ல மெல்ல ஓடி ஓடி நாங்கள் முள்ளிவாய்க்கால் வரையும் இருந்ததை கொடுத்து கொடுத்து ஓடினோம்.
ஓடி ஓடி இறுதியாக முள்ளிவாய்க்காலை கடந்து நந்திக்கடல் கடந்து வவுனியா சென்று திரும்ப எங்கள் மண்ணிலே வந்து குடியேறி இப்பொழுது ஓரு விளையாட்டு நிகழ்விலே மன்னாரில் இருந்து வந்தும் யாழ்ப்பாணம் இளவாலையில் இருந்து வந்தும் இந்த மண்ணிலே கலந்து கொள்கிறோம்.
உருத்திரபுரம் என்ற மண்ணிலே கலந்து கொள்கிறோம் என்றால் இதுவும் ஓரு வரலாற்றின் திருப்பம் என்பதை நாங்கள் நினைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் எங்களிடம் இருந்த உறுதியும் தளராத நம்பிக்கையும் எங்கள் மனங்களிலே இருந்த உச்சமான பலமும்தான் எங்களை மீண்டும் மனிதர்களாக இந்த மண்ணிலே நிமிர்த்தியிருக்கிறது.
அன்பான பிள்ளைகளே உங்கள் அருமையான விளையாட்டை கொஞ்ச நேரம் என்னால் பார்க்க முடிந்தது. ஆனால் போட்டிகள் எங்களை சரியான பாதையில் இட்டுச்செல்ல வேண்டும். போட்டிகளிலே நாங்கள் வெற்றி தோல்விகளை மதிக்கின்ற தன்மையும் எங்களுக்குள் நாங்கள் விட்டுக்கொடுத்து பழகுகின்ற உணர்வுகளையும் எங்களுக்குள்;
வளர்த்துக்கொள்ளவேண்டும்.
கோபங்கள் வரத்தான் செய்யும் ஆனால் அதனை அந்த இடங்களில் உணர்ச்சிகளாக வெளிக்காட்டாமல் ஒற்றுமையோடும் பலத்தோடும் நகரவேண்டும்.
நான் யாழ்ப்பாணத்தில் கூட கடந்த வருடங்களில் நடந்த சில விளையாட்டுப்போட்டிகளில் வாள்வெட்டுச்சண்டையில் இறந்தவர்களை அல்லது போட்டிகளில் காயப்பட்டவர்களை எல்லாம் பற்றி படித்திருக்கிறோம்.
அப்படியான ஒரு நிகழ்வு அந்தக்கலாச்சாரம் எங்களினத்தில் இருந்திடக்கூடாது. விளையாட்டு என்றாலே ஒரு விறு விறுப்பு இருக்கும். அது எந்த விளையாட்டுக்கும் இல்லாத விறுவிறுப்பு உதைபந்தாட்டத்துக்கு இருக்கிறது.
தலைவர் பிரபாகரன் கூட விளையாட்டுக்களிலே அவர் நேசித்த விளையாட்டு உதைபந்தாட்டம். அதனால் தான் நாங்கள் வீரர்களாக இருக்கவேண்டுமானால் வீர விளையாட்டுக்களில் நாங்கள் பங்கு கொள்ளவேண்டும்.
திட ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டுமென்றால் அந்த வீரம் செறிந்த விளையாட்டுக்களில் பங்கு பற்ற வேண்டும் என்ற செய்தியை அவர் பல இடங்களில்
சொல்லியிருக்கின்றார்.
எங்களுடைய உடலாரோக்கியம் மட்டுமல்ல உள ஆரோக்கியம் விட்டுக்கொடுத்தல் நாங்கள் மற்றவர்களை அணைத்துச்செல்லுதல் இன்னொரு பக்கத்திலே நாங்கள் மனித நேயத்தையும் மனித காருண்யத்தையும் நேசித்தல். இவை எல்லாம் இந்த விளையாட்டுக்களில் இருக்கின்றன என்றார்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை சிறப்பு, விருந்தினர்களாக மாவட்ட விளையாட்டு அதிகாரி றிச்சட் மோகனதாஸ், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி குகானந்தராஜா மற்றும் கௌரவ விருந்தினர்களாக கிளி உதைபந்தாட்ட செயலாளர் சுவிஸ்கரன் சிவநகர்,
அ.த.க பாடசாலை முதல்வர் இராஜரட்ணம் மற்றும் கிளி புனித பற்றிமா றோ.க.த.க பாடசாலை முதல்வர் அருட்சகோதரி எவரஸ்ரா பிரான்சிஸ் முன்னாள் ஆசிரியர் அன்ரன் அன்பழகன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தலைவர் பிரபாகரனுக்கு பிடித்த விளையாட்டு உதைபந்தாட்டம்!
Reviewed by Author
on
February 28, 2016
Rating:

No comments:
Post a Comment