சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களமே காரணம்: சத்தியலிங்கம்
தொண்டர்களின் நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களமே காரணம். அவர்களே இதுவரை அனுமதி வழங்கவில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள வட மாகாண சுகாதார திணைக்களத்தின் உப அலுவலத்தில் நேற்று அமைச்சரை சந்தித்து சுகாதார தொண்டர்களின் போராட்டம் தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக ஊடகங்களில் மாறுபட்ட கருத்துக்களை அண்மைக்காலங்களில் காணக்கூடியதாக உள்ளது.
வடக்கு மாகாணத்தில் சுகாதார தொண்டர்கள் நீண்ட காலமாக வேறு வேறு காலத்தில் தொண்டர்களாக பணியாற்றியுள்ளனர்.
நான் சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்த காலத்தில் கூட பலர் தொண்டர்களாக கடமையாற்றினர். அவர்களில் சிலர் இறந்திருக்கின்றார்கள். சிலர் திருமணம் முடித்துள்ளனர்.
ஆனால் 2014 ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 25.2014 ஃ 25.1.2014 என்ற சுற்றுநிருபத்தின் அடிப்படையில் சுகாதார திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தற்காலிக அடிப்படையிலோ பணிபுரிந்தவர்களை நிரந்தரமாக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நாம் வடக்கு மாகாணத்தில் சுகாதார திணைக்களத்திற்கு கீழ் 900 பேரை நிரந்தரமாக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்தோம்.
அவ்வாறு நிரந்தர நியமனம் கொடுத்த சந்தர்ப்பத்தில் ஆளுனராக இருந்த சந்திரசிறி மற்றும் பிரதம செயலாளர் இந்த நியமனத்திற்கு உரியவர்கள் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரினால் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தற்காலிக அடிப்படையிலோ நியமனக்கடிதங்களை பெற்றவர்கள் மாத்திரமே நிரந்தர நியமனத்திற்கு உரியவர்கள் என எழுத்து மூலம் எமக்கு அறிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் யார் சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமனக்கடிதங்களை வைத்திருந்தார்களோ அவர்களை மாத்திரம் உள்வாங்கினோம்.
அவர்களில் 900 பேர் இருந்தனர். ஆனால் 5 மாவட்டங்களிலும் இந்த நியமனங்களுக்குள் உள்வாங்கப்பட்டாமல் அப்போது தொண்டர்களாக வேலை செய்தவர்களும் அல்லது பல வருடங்களுக்கு முன்னர் தொண்டர்களாக வேலை செய்தவர்கள் இந் நியமனம் வழங்கப்பட்டமையினால் தமக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் என தற்போது வந்துள்ளனர்.
இதில் தொண்டர்களாக இல்லாமல் தமது சொந்த வாழ்வில் இருந்தவர்களும் தற்போது இவ்வாறான சந்தர்ப்பம் வரும்போது நியமனத்திற்காக வந்துள்ளனர்.
அரச திணைக்களத்தில் நிரந்தர நியமனம் கிடைக்கின்றது என்றால் வருவது வழமை. இவ்வாறு வந்தவர்கள் எல்லோருமாக 759 பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.
எனினும் 759 பேரையும் அந்தந்த மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் தொண்டர்களாக பணிபுரிந்ததை உறுதிப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த 5 மாவட்டத்தில் இருந்து வந்த சுகாதார தொண்டர்களின் பெயர் விபரங்களை ஒருங்கிணைத்து மத்திய அரசாங்கத்தில் அனுமதியை பெறவேண்டிய தேவை உள்ளது.
நாம் நியமனத்தை வழங்குவதாக இருந்தால் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் என்ற திறைசேரிக்கு கீழ் செயற்படும் திணைக்களமே ஆளணி தொடர்பாக தீர்மானிக்கும். அந்த திணைக்களத்தின் அனுமதியின்றி புதிய நியமனங்களை வழங்கமுடியாது.
ஆனாலும் நான் 759 பேரின் நிரந்தர நியமனத்திற்கு வடக்கு மாகாணசபை அமைச்சர் வாரியத்தினுடைய அனுமதியை பெற்றுள்ளேன். அத்துடன் முன்னாள் ஆளுனர் பளிககாரவிடமும் முறையான அனுமதியை பெற்றுள்ளேன்.
ஆனாலும் கடந்த ஒரு வருடங்களாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்காக காத்திருக்கின்றோம்.
ஆனால் அவர்கள் அனுமதியை தரவில்லை. அவர்கள் 2014 இல் வந்த சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தொண்டர்களை உள்வாங்கும்போது எமக்கு அனுமதிக்கப்பட்ட ஆளணிக்கு அதிகமாக நீங்கள் உள்வாங்கலாம்.
அவ்வாறு உள்வாங்கிய அனைவரையும் ஆளணியாக மாற்றித்தருவோம் என்பதை அந்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மத்திய அரசின் கீழ் வரும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் மாகாணசபை எடுத்தவர்களை இதுவரை ஆளணியாக மாற்றவில்லை.
எனவே எங்கள் அமைச்சில் அனுமதிக்கப்பட்ட ஆளணியையும் விட 600 பேர் மேலதிகமாக பணிபுரிவதாக தெரிவித்துள்ளதுடன் மேலதிகமான அனுமதியை வழங்கமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜனாதிபதியை சந்தித்த போதும் யுத்த காலத்தில் பணியாற்றிய இவர்கள் தொடர்பாக தெரிவித்திருந்தோம். திறைசேரி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கீழ் வருவதனால் அவர்களிடமும் இத் தொண்டர்கள் தொடர்பாக கூறியுள்ளோம்.
எனினும் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியாமல் இருப்பதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களமே காரணமாக உள்ளது என தெரிவித்தார்.
சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களமே காரணம்: சத்தியலிங்கம்
Reviewed by Author
on
June 10, 2016
Rating:

No comments:
Post a Comment