தமிழரை அல்லது ஒரு இஸ்லாமியரை ஜனாதிபதியாக இலங்கை தெரிவு செய்யுமா?
மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் தனி மனித உரிமைகள் காத்து வருவதாக பெருமை பேசி வருகின்றன.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்க அரசியலமைப்பில் உள்ள முதல் 10 சட்ட திருத்தங்கள் தனி மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பற்றி தான் கூடுதலாக விவாதிக்கின்றன.
இவை எல்லாம் விட, அமெரிக்க அரசியலமைப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் ‘அங்குள்ள தனி நபர்களை எந்த சூழ்நிலையிலும் அரசிடமிருந்து பாதுகாப்பது தான்’
ஒரு தனிநபருக்கு அமெரிக்க அரசியலமைப்பு வழங்கும் உரிமைகளை நிரூபிக்க மற்றொரு சிறந்த உதாரணத்தை கூறலாம்.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள எந்த நாடும் சிறுபான்மையினரை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தது இல்லை.
ஆனால், அமெரிக்கா சிறுப்பான்மை இனத்தை(ஆப்பிரிக்க-அமெரிக்கா) சேர்ந்த ஒபாமாவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளது. இது தான் அந்நாட்டு அரசியலமைப்பின் சக்தியாகும்.
அமெரிக்காவை அடுத்த இந்தியா சிறுப்பான்மையினத்தை சேர்ந்தவரை ஜனாதிபதியாக(ஆர்.கே நாராயணன்) தெரிவு செய்துள்ளது. ஆனால், இவரது சாதி, மதத்தை குறிப்பிட்டு தான் அவரை சிறுப்பான்மையினராக கருதுகிறார்களே தவிர ஒபாமாவை போல் ஆர்.கே நாராயணன் வெளிநாட்டு பின்புலம் உள்ளவர் அல்ல.
இந்த வகையில், தனிநபர் உரிமைகளை காப்பதில் அமெரிக்கா அரசியலமைப்பு உறுதியுடன் விளங்கி வருகிறது.
சரி, இலங்கையில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஒரு தமிழரை அல்லது ஒரு இஸ்லாமியரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய அந்நாட்டு குடிமக்கள் முன்வருவார்களா?
தற்போது இலங்கையில் நிலவி வரும் சூழலின் அடிப்படையில் பார்த்தால் இந்த கேள்விக்கு ‘ஆமாம்’ என்ற பதிலை நாம் நினைத்துக்கூட பார்க்க இயலாது.
இலங்கையில் உள்ள பெரும்பான்மையான வாக்காளர்கள் ஒரு சிங்களவரை தவிர வேறொருவரை ஜனாதிபதியாக நிச்சயம் தெரிவு செய்ய மாட்டார்கள்.
இன்னும் ஒரு படி மேலே கூறினால், பெளத்த மதத்தை சாராத ஒரு சிங்களவரை கூட அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்வார்கள். ஆனால், ஒரு தமிழருக்கோ அல்லது இஸ்லாமியருக்கோ இந்த வாய்ப்பு கிடைக்காது.
ஏனெனில், மஹாவம்ச வரலாற்று நூலில் சிங்களவர்களே இலங்கையின் ஆட்சியாளர்கள் என்ற விடயம் சிங்களவர்களின் மனதில் திடமாக பதிந்துள்ளது.
இரண்டாவதாக, கெளதம புத்தரை கூட சிங்களவர்களுக்கான அடையாளமாகவே காட்டி வந்துள்ளதால், சிங்களவர்கள் தான் இலங்கை பூமியை ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மையான வாக்காளர்கள் இன்றளவும் எண்ணி வருகிறார்கள்.
இந்த எண்ணத்தை தகர்த்து, ஒரே தேசமாக இலங்கை எழ வேண்டும் என்றால், இலங்கையின் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றில் ஏதாவது ஒரு கட்சி மூலமாக சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட வேண்டும்.
இருப்பினும், இது நிகழும் என்பது கூட கற்பனைக்கு அப்பாற்பட்டது தான். ஏனெனில், முழு தகுதி வாய்ந்த ஒரு தமிழரை அல்லது இஸ்லாமியரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது என்பது இயலாத விடயம்.
ஆனால், கடந்த 2004ம் ஆண்டு ஒரு தமிழருக்கு இலங்கை தேசத்தின் பிரதமராக வாய்ப்பு கிடைத்து நூழிலையில் தவறியுள்ளது.
இலங்கையின் 5-வது ஜனாதிபதியான சந்திரிக்கா பண்டார்நாய்க்கா குமாரத்துங்க தான் இந்த வாய்ப்பினை ஏற்படுத்தினார்.
அப்போதைய வெளியுறவு அமைச்சராக பதவி வகித்து வந்த தமிழரான லக்ஷமன் கதிர்காமரை பிரதமர் வேட்பாளராக குமாரத்துங்க அறிவித்தார்.
ஆனால், இதனை உட்கட்சி அரசியல்வாதிகள் ஏற்காமல் குழப்பம் ஏற்படுத்தினர். இதன் விளைவாக, இந்த பிரதமர் வாய்ப்பு மஹிந்த ராஜபக்சவிற்கு சென்றது. ராஜபக்ச பிரதமராகி பின்னர் ஜனாதிபதியாகவும் தெரிவானார்.
இதன் மூலம் சிங்கள-பெளத்தம் என்ற முக்கிய கொள்கையில் தான் இந்த கட்சியின் அடித்தளமே அமைந்துள்ளது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளலாம்.
சரி, ஐக்கிய தேசிய கட்சியாவது ஒரு தமிழரை அல்லது ஒரு இஸ்லாமியரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமா? தற்போதுள்ள கணிப்பின்படி, நிச்சயமாக முடியும்.
அதாவது, பலமான எதிர்க்கட்சியினரை எதிர்க்கொள்ள தகுதி வாய்ந்த, அரசியல் ஞானம் பெற்ற ஒரு தமிழரை அல்லது ஒரு இஸ்லாமியரை தெரிவு செய்தால், அவர் ஜனாதிபதி ஆவது ஓரளவிற்கு சாத்தியம் தான்.
இதற்கு முக்கிய காரணம் என்னவெனில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய தேசிய கட்சியானது ஆரம்பக் காலம் முதல் மக்களுடன் மக்களாக கலந்து சமுதாய பிரச்சனைகளை கலைய முயற்சித்து வருகின்றனர். இதனால், அக்கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
குறிப்பாக, அமெரிக்க அரசிலமைப்பில் கூறப்பட்டுள்ளது போல ஐக்கிய தேசிய கட்சி மில்லியன் கணக்கிலான இலங்கை குடிமக்களின் தனிமனித உரிமைகளை காப்பதில் கூடுதலாக முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் தனிமனித உரிமைகளை பற்றி விவாதிப்பது என்பது பெரும் ஆபத்தான விடயமாக மாறியுள்ளது.
மேற்கத்திய நாடுகள், ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆசியா உள்ளிட்ட எந்த நாடுகளாக இருந்தாலும், தனிமனித உரிமைகளை ஒடுக்குவது என்பது ஒரு மிகபெரிய பாவச்செயல் என்பதை உணர வேண்டும்.
தனிமனித உரிமைகளை ஒரு நபர், ஒரு அமைப்பு அல்லது ஒரு நாட்டின் அரசாங்கம் ஒடுக்குவது என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு துரோகச் செயல் என்பதை உணர வேண்டும்.
ஆனால், இலங்கையில் தனிமனித உரிமை மீறல்கள் தான் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. எந்த ஆட்சியாக இருந்தாலும், இவற்றில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது தான் வேதனையான விடயம்.
பன்முக தன்மை கொண்ட, பல கலாச்சாரங்களை பின்பற்றி வரும் இலங்கையில் தனிமனித உரிமைகளை காப்பது என்பது மிக அவசியமானதாகும்.
ஆனால், பெரும்பான்மையான மக்களின் தனிமனித உரிமைகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒடுக்கப்படுகிறது. பல்வேறு தரப்பு மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுவதினால், தங்கள் மீதான மனித உரிமை மீறல்களை எதிர்த்து அவர்கள் போராடுவது என்பது கானல் நீராக மறைந்து விடுகிறது.
பொதுமக்களின் இந்த பலவீனத்தை ஊழலில் செலுத்துள்ள அரசியல்வாதிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான ஒரு பலமான வட்டத்தை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.
இதன் மூலம், சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்டவர்களிடையே சம உரிமை மறுக்கப்படுவதால், ஊழலில் கறைப்படிந்த அரசியல்வாதிகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கப்படுகின்றனர்.
வடக்குப் பகுதியில் வசிக்கும் தமிழர்களும் கிழக்குப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களும் மற்றும் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் சிங்கள பெளத்தர்கள் இதுபோன்ற ஆட்சி அமைக்கும் முறைக்கு காரணமானவர்கள்.
இந்த சமுதாயத்தினரின் அவசியமான பிரச்சனைகளை எந்த அரசும் எடுத்தவுடன் நிராகரிக்க முடியாது. அதேபோல், ஒரு சர்வாதிகாரியை உருவாக்கவும் இலங்கை அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்காது.
ஆனால், ஆட்சியில் இருக்கும் தலைமையானது அனைத்து சமுதாயத்தினரின், சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் கூட, தனிமனித உரிமைகள் காக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும். சிறுபான்மை சமுதாயத்தினரின் நேர்மையான உரிமைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே அவர்களின் கனவு ஒரு நாள் சாத்தியமாகும்.
தமிழரை அல்லது ஒரு இஸ்லாமியரை ஜனாதிபதியாக இலங்கை தெரிவு செய்யுமா?
Reviewed by Author
on
June 17, 2016
Rating:

No comments:
Post a Comment