ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடமாகாணத்தில் முன்மொழியப்பட்ட மீன்பிடித்துறை அபிவிருத்தி கருத்திட்டம்!
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, போரினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீன்பிடித்துறையை மீளக்கட்டியெழுப்புவதற்கான கருத்திட்டத்தை தயாரிப்பதற்கான தொழினுட்ப உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி வடமாகாணத்திற்கான நிலைபேறான மீன்பிடித்துறை அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஜக்கிய அமெரிக்கடொலர்கள் 62 மில்லியன் நிதியுதவியுடன் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறைமற்றும் குருநகர் மீன்பிடிதுறை முகங்களையும் மன்னார் மாவட்டத்தில் பேசாலை மீன்பிடித் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதாகும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
யுத்தத்தம் காரணமாக கடல்மீன் உற்பத்தியில் வீழ்ச்சி
வடமாகாணமானது கடந்த காலங்களில் மீன்பிடி உற்பத்தியில் சிறந்ததொரு மாகாணமாகக் காணப்பட்டது. 30 வருடகால யுத்தத்தின் பலனாக மீன்பிடி உற்பத்தியானது குறைவடைந்து காணப்படுவதுடன் மீன்பிடி உட்கட்டமைப்புவசதிகள் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியுடன் அமுல்படுத்தப்படும் உத்தேச கருத்திட்டமானது மீன்பிடித் துறைமுகங்கள், நங்கூரமிடும் தளங்கள், கரையேறும் இடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவற்றின் மேம்படுத்துதலை இலக்காகக் கொண்டுள்ளது.
யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில், வடமாகாணமானது கடல்சார் மீன்பிடியில் 40 வீத பங்களிப்புசெய்தது.
ஆனால் 2009ம் ஆண்டளவில் இப்பங்களிப்பானது 9 வீதமாக குறைவடைந்தது. எனினும் கடலோர மீன்பிடியில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் விளைவாக இப்பங்களிப்பு 12 வீதமாக உயர்வடைந்துள்ளது.
யுத்தத்திற்குமுன் யாழ். மாவட்டம் ஓரேயொருமீன்பிடித் துறைமுகத்தினை கொண்டிருந்தது. அது பின்னர் அரச படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன் வட மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடியமீன்பிடித் துறைமுகம் காணப்படவில்லை.
இதன் விளைவாக ஆழ்கடல் மீன்பிடியில் முழுமையாக ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
மீன்பிடித் துறைமுகவசதிகள் போதியளவு காணப்படாமை, பலநாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடக்கூடியபடகுகள் (multiday boats) மற்றும் இதரவசதிகள் போதியளவு காணப்படாமை என்பன மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு வரையறைகளாகக் காணப்படுகின்றன என அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகம்
சாத்தியவள ஆய்வுகள், பருத்தித்துறை துறைமுகத்தினை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு உகந்த நிலைபேறான இடமாக அடையாளம் கண்டுள்ளதுடன் உத்தேச திட்டமானது அத்துறைமுகத்தின் படுக்கையை (Habour basin) 12 ஹெக்டேயர்களாகவும் 5 மீற்றர் ஆழம் கொண்டதாகவும் அமைப்பதுடன் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகுகளின் செயற்பாடுகளை வசதிப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
இது டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தினை ஒத்ததாக விருத்தி செய்யப்படுவதுடன் மீனவர்கள் சர்வதேசகடல்பரப்பில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்களை கொண்டிருக்கும்.
இதன் உத்தேசமதிப்பீட்டுத் தொகை ரூபா 6 பில்லியன்களாகும். இது அலை தாங்கி (breakwater), கப்பல்துறை சுவர் (Quay wall), ஏலம்விடப்படும் அறை (Auction hall), குளிரூட்டும் அறைகள் (cool room) குளிரூட்டிகள் (Ice plant), ஆழமாக்கும் வசதிகள் (dredging facilities) மற்றும் படகுகள் திருத்தும் வசதிகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படும்.
பலநாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடக்கூடிய படகுகள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதை இது வசதிப்படுத்தும்.
குருநகர் மின்பிடித் துறைமுகம்
யாழ் மாவட்டத்திலுள்ள குருநகர் துறைமுகமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடனான உத்தேசகருத்திட்டத்தின் கீழ் 2.5 மீற்றர்களுக்கு ஆழப்படுத்தப்படும்.
இதன் உத்தேச மதிப்பீட்டுத் தொகைரூபா 4.8 பில்லியன்களாகும். இது அலை தாங்கி (breakwater), கப்பல்துறைசுவர் (Quay wall), ஏலம்விடப்படும் அறை (Auction hall), குளிரூட்டும் அறைகள் (cool room) குளிரூட்டிகள் (Ice plant), ஆழமாக்கும் வசதிகள் (dredging facilities) மற்றும் படகுகள் திருத்தும் வசதிகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகக் காணப்படும்.
ஆழமற்றநீர் தொடர்பான வரையறை காணப்பட்ட போதிலும் உத்தேசதிட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் வசதிகள், பலநாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடக்கூடிய படகுகள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதை வசதிப்படுத்தும்.
பேசாலைமீன்பிடித் துறைமுகம்
மூன்றாவது மீன்பிடித் துறைமுகம் மன்னார் மாவட்டத்தில் பேசாலையில் அபிவிருத்தி செய்யப்படும்.
தற்போது இத்துறைமுகம் ஆழமற்றதாகவும் ஒருநாள் மீன்பிடி படகுகளின் செயற்பாடுகளை வசதிப்படுத்துவதாகவும் கரையோர வசதிகள் அற்றதாகவும் காணப்படுகின்றது.
பலநாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடக்கூடிய படகுகள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதை வசதிப்படுத்தும் நோக்கில், உத்தேசகருத்திட்டத்தின் கீழ் இத்துறைமுகமானது 2.5 மீற்றர்களுக்கு ஆழப்படுத்தப்படும்.
நங்கூரமிடும் மின்பிடித் தளங்கள் (Fishery Anchorages)
தற்போது வடமாகாணத்தில், வடக்குகிழக்கு பருவமழையின் போது போதியளவு தங்குமிட வசதிகள் காணப்படாமை, அணுகல் மற்றும் நங்கூரமிடுவதற்கு போதுமான ஆழம் காணப்படாமை, தரையிரங்குவதற்கு போதிய இடமின்மை மற்றும் கரையோரவசதிகள் காணப்படாமை என்பன மீன் பிடித்தலுக்கு தடையாக உள்ளதுடன் படகுகள் ஆழமற்ற நீரிலேயே நங்கூரமிடுகின்றன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடனான உத்தேச கருத்திட்டமானது அலைதாங்கி, துறைமுகபடுக்கையை ஆழமாக்கல், அணுகல் கால்வாய்களை அமைத்தல் மற்றும் கரையோர வசதிகளை மேம்படுத்தல் என்பவற்றினூடாக நங்கூரமிடும் தளங்களை விருத்திசெய்தலை இலக்காகக் கொண்டுள்ளது.
பன்னிரண்டு நங்கூரமிடும் தளங்களை மேம்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாதகல், முனை, பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டிதுறை, அத்கோவிலடி, தொண்டமனாறு, மண்டைதீவு, நெடுந்தீவிலுள்ள தாளதுறை ஆகிய தளங்கள் யாழ் மாவட்டத்திலும், பன்னகட்டிகொட்டுதளம் மன்னார் மாவட்டத்திலும் பள்ளிகுடா, நாச்சிகுடா மற்றும் வாழைக்காடு தளங்கள் கிளிநொச்சி மாவட்டத்திலும் விருத்தி செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கரையிறங்கும் மீன்பிடி தளங்களை அபிவிருத்தி செய்தல்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவான கரையிரங்கும் மீன்பிடிதளங்களை பிரதானமாக கரையோர வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
இதன் கீழ் சம்போடை, காக்கைதீவு, அராலித்துறை, சக்கோடை, சேந்தன்குளம், புங்குடுதீவு, கொழும்புத்துறை மற்றும் சுள்ளிபுரம் ஆகிய கரையிறங்கும் மீன்பிடித் தளங்களை யாழ் மாவட்டத்திலும் ஏனைய பலதளங்களை முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் இத்திட்டமானது நீரியல்வள அபிவிருத்தியையும் குறிப்பாக உவர்நீர் நீரியல் வளமரபு அல்லாத வாழ்வாதார நடவடிக்கைகளான கடல் வெள்ளரி (sea cucumber), கடல்பாசி மற்றும் நண்டுவளர்ப்பு ஆகிய ஏற்றமதி வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படும் அதிகவருமானம் ஈட்டும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதையும் இலக்காக கொண்டுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சானது ஜக்கிய அமெரிக்க டொலர்கள் 62 மில்லியன் கருத்திட்டத்தினை செயற்படுத்தும் நிறுவனமாக இருப்பதுடன் மீன்பிடிமற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு, இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றுடன் இணைந்து இதனை அமுலாக்கும்.
இத்திட்டம் பூர்த்திசெய்யப்படும் பட்சத்தில் மீன்பிடித்தறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்படும் எனவும் மீள்குடியேற்றப்பட்ட மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞான சோதி தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வடமாகாணத்தில் முன்மொழியப்பட்ட மீன்பிடித்துறை அபிவிருத்தி கருத்திட்டம்!
Reviewed by Author
on
June 18, 2016
Rating:

No comments:
Post a Comment