வவுனியா அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு....
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களது பெயர்கள், பட்டியலில் இல்லை என்பதனால் சிறிது நேரம் கூட்டம் இடம்பெறும் பிரதேசத்திற்கு வெளியில் தடுக்கப்பட்டனர்.
அதனையடுத்து மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்கள அதிகாரி மூலமாக ஊடகவியலார்கள் கூட்டம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் மாத்திரம் செய்தி சேகரித்த பின்னர் வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் ஊடகவியலாளர்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது ஏனைய மாவட்டங்களில் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவது போல் முழுமையாக செய்தி சேகரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் இணைத்தலைவரான செல்வம் அடைக்கலாதன் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுடன் தொடர்புகொண்டு சம்பவத்தை தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இந்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபருக்கு தெரிவிப்பதாக கூறியிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் ஒரே இடத்தில் இருந்து செய்தியை சேகரிக்க வேண்டும் எனவும் நடந்து திரியவோ கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு அண்மையாகவே செல்ல முடியாது என்ற கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் ஒரே இடத்தில் இருந்து செய்தி சேகரித்த நிலையில் சிங்கள ஊடகவியலாளர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு அண்மையாக சென்று செய்தியை சேகரித்திருந்தனர். இதன்போது ஊடகவியலாளரொருவர் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக இணைத்தலைவர் ரிசாட் பதியுதீனிடம் கேள்வியொன்றை கேட்க முற்பட்ட வேளையில் மாவட்ட செயலக அதிகாரியொருவர் குறித்த ஊடகவியலாளருடன் முரண்பட்டதுடன் அவரை வெளியேற்ற வேண்டிவரும் எனவும் அச்சுறுத்தினார்.
இதனை கண்ட அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் குறித்த ஊடகவியலாளரை அண்மையில் அழைத்து சம்பவம் தொடர்பாக கேட்டிருந்ததுடன் இது தொடர்பாக அரசாங்க அதிபரிடம் தான் தெரிவிப்பதாகவும் ஊடகவியலாளரிடம் கூறியிருந்தார். இந் நிலையில் கூட்டம் நிறைவுபெறும் தறுவாயில் அரசாங்க அதிபர் யார்யாரை கூட்டத்திற்கு அனுமதிக்க முடியும் என்பது தொடர்பாக விளக்கமொன்றினை அளித்திருந்தார்.
வவுனியா அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு இடையூறு....
Reviewed by Author
on
June 16, 2016
Rating:

No comments:
Post a Comment