அண்மைய செய்திகள்

recent
-

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, ஆனால் எங்களுடைய போராட்டம் நிறுத்தப்படவில்லை!


ஆயுதம் ஏந்திப் போராடினோம். அது மௌனிக்கப்பட்டது, ஆனால் எங்களுடைய போராட்டம் நிறுத்தப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டிய தேவை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகராட்சி மன்றத்தின் சைவசமய விவகாரக் குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிட்டு வரும் ‘நல்லைக் குமரன் மலர்-2016 வெளியீட்டு விழா’ இன்று புதன்கிழமை(24) காலை யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் யாழ். மாநகர சபையின் தலைவர் பொ. வாகீசன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாங்கள் எங்களுடைய தனித்துவமான மனித வளத்தை நாங்கள் பாவிக்க வேண்டும். எங்களுடைய அறிவைப் பாவிக்க வேண்டும். எங்கள் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை வேறொரு வகையில் அர்ப்பணிப்புள்ளதாக வகுத்துக் கொள்ள வேண்டும்.

கொழும்பிலுள்ள சிங்கள நண்பர்கள் என்னிடம் சற்றே விட்டுக் கொடுக்கலாமே? எனச் சொல்லுவார்கள். அதற்கு நான் அவர்களுக்குப் பதிலளிக்கும் போது எங்களின் உரிமைகளை, எங்களுக்குத் தேவையானவற்றை, உண்மையை எடுத்தியம்புகிறோம். நீங்கள் அதனைப் பிழையானதாகச் சிந்தித்துப் பிழையானதாக நோக்கினால் நாங்கள் பொறுப்பல்ல எனத் தெரிவித்தேன்.

நான் இன்று கொழும்பிலிருந்து விமானத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவும் விமானத்தில் வந்திருந்தார். அவரும் என்னிடம் நீங்கள் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும் எனக் கூறுகிறீர்கள். அது எவ்வாறு சாத்தியப்படும்? சிங்கள மக்கள் பல வருட காலமாக வடக்குக் கிழக்கில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்குரியது என நீங்கள் கூறுவது பிழை எனத் தெரிவித்தார்.

அதற்கு நான் பதிலளிக்கும் போது, காலாதி காலமாகத் தமிழ் மொழி தான் வடக்கு, கிழக்கில் நடைமுறையிலிருந்து வருகின்ற மொழி. அதிலே எந்த விதமான சந்தேகங்களும் இருக்கமுடியாது. இல்லையே…. அங்கெல்லாம் பெளத்த சின்னங்கள் காணப்படுகின்றன என என்றார். அதற்கு நான் ஆம்…. பெளத்த சின்னங்களிருக்கின்றன. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் தமிழர்கள் பெளத்தர்களாகவிருந்தார்கள். அதனால் தான் பெளத்த சின்னங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் நீங்கள் சிங்கள மக்கள் தான் வாழ்ந்தார்கள் என நீங்கள் எவ்வாறு கூற முடியும்? என அவரைப் பார்த்துக் கேட்ட போது அவரால் எனது கேள்விக்குப் பதிலளிக்க முடியவில்லை.

இந்த உரையாடலில் அவர் ஒரு சிங்களவர் என்ற ரீதியில் தேவநம்பிய தீச மன்னனைப் பற்றிய சில விடயங்களையம் பகிர்ந்து கொண்டார். தேவநம்பிய தீச மன்னன் சிங்களவராக இருக்க முடியாது? சிங்கள மொழி கிறிஸ்துவிற்குப் பின் ஆறாம் நூற்றாண்டில் தானே நடைமுறைக்கு வந்தது என்பது குறித்துத் தெரியப்படுத்தினேன். ஆகவே, சரித்திர ரீதியாகப் பலவிதமான பிழையான எண்ணங்களை, தகவல்களைச் சேகரித்துக்கொண்டு எங்களுடைய மக்களிடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றேன். அதற்கு அவர் உங்கள் எண்ணங்கள், நோக்குகள் வித்தியாசமாகவும், எங்களுடைய நோக்குகள் வித்தியாசமாகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது சரித்திரசம்பந்தமானதொரு விடயம் தானே? ஆகவே, சரித்திர சம்பந்தமானதொரு விடயத்தை நாங்கள் சர்வதேச ரீதியான சரித்திர ஆய்வாளர்களை அழைத்து நான் சொல்லுவது சரியா? நீங்கள் சொல்லுவது சரியா? என ஆராய்ந்து பார்ப்போம் எனக் குறிப்பிட்டேன். அதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? என அவர் சொன்னார். இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிந்தால் தான் இவ்வாறான குழப்பங்களுக்குத் தீர்வு காண முடியும் என நான் அவருக்குக் கூறி வைத்தேன்.

நாங்கள் தற்போது உணர்ச்சி பூர்வமாகவே அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். இந்த உணர்ச்சி பூர்வமான சூழலுக்குள் எங்களுக்குள் நான் பெரிதா? நீ பெரிதா? யார் முதலில் வந்தது? யார் பிறகு வந்தது? எனப் பலவிதமான கேள்விகள் உள்ளன. இதனால் தான் எங்களுடைய அரசியல் கீழ் நிலையிலுள்ளது எனவும் தெரிவித்தார்.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, ஆனால் எங்களுடைய போராட்டம் நிறுத்தப்படவில்லை! Reviewed by Author on August 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.