மாந்தை மேற்கு 3 ஆம் பிட்டி சந்திக்கு அருகில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கி வைப்பு-வடமாகாண சபை உறுப்பினர் நேரடி விஜயம்.(படம்)
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ள நிலையில் குறித்த காணி நில அளவீடு செய்யும் நடவடிக்கைகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.
குறித்த காணி இராணுவத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் குறித்த காணி நில அளவை செய்யப்பட்டமை குறித்து அப்பகுதி மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று புதன் கிழமை (24) காலை குறித்த பகுதிக்குச் சென்று இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டு நில அளவை செய்யப்பட்ட குறித்த காணியை பார்வையிட்டதோடு, அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார்.
இதன் போது குறித்த காணி சுமார் 2 ஏக்கர் விஸ்தீரினம் கொண்டது எனவும்,குறித்த காணி நேற்று (23) செவ்வாய்க்கிழமை மதியம் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் நில அளவை செய்யப்பட்டு காணிக்கான எல்லைக்கல் போட்ப்பட்ட நிலையில் இராணுவத்திடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்பகுதி மக்கள் வடமாகாண சபை உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
மேலும் இராணுவத்திற்கு நில அளவை செய்யப்பட்ட குறித்த காணியில் அங்பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் காணியும் உள் அடங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கையின் மூலமே குறித்த காணி நில அளவை செய்யப்பட்டதாகவும், குறித்த மூன்றாம் பிட்டி கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் கடமையில் இல்லாத நிலையில் வேறு கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் ஒருவரை பிரதேசச் செயலாளர் நியமித்த நிலையில் அவர் அங்கு வந்து நில அளவையில் ஈடுபட்டதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நில அளவையில் ஈடுபட்ட குறித்த கிராம அலுவலகர் தமது கிராமத்தில் அவருக்கு நெருங்கியவர்களின் பெயர்களின் காணி அபகரிப்பை மோற்கொண்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மாகாண சபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.
மூன்றாம் பிட்டி மற்றும் அதனை அண்டிய கிராம மக்களுக்கு பல்வேறு தேவைகளுக்காக காணி தேவைப்படுகின்றமை குறித்து தற்போதுள்ள மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் பல தடவைகள் காணிக்கான கோரிக்கை விடுத்தள்ள போதும் பிரதேசச் செயலாளர் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக மூன்றாம்பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் பிட்டி கிராமத்தில் ஏற்கனவே மூன்று படை முகாம்கள் உள்ள நிலையில் ஏன் நான்காவது படைமுகாம் அமைக்கப்படுகின்றது எனவும் மூன்றாம் பிட்டி கிராமத்தில் உள்ள மக்களாகிய நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?? என அந்த மக்கள் மாகாண சபை உறுப்பினரிடம் கேல்வி எழுப்பியுள்ளனர்.
எனவே மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் மற்றும் எமது கிராமத்திற்கு சம்மந்தமே இல்லாத கிராம அலுவலகர் ஆகியோரின் சுய நலத்துடன் குறித்த காணி இராணுவத்திற்கு கையளிக்க நில அளவை செய்யப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினரிடம் தெரிவித்த அப்பகுதி மக்கள் எதிர்வரும் காலங்களில் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் கிராம மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்படும் என அந்த மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
எனவே குறித்த காணி இராணுவத்திற்காக நில அளவீடு செய்யப்படவுள்ளது என்பது குறித்து பகிரங்க அறிவித்தல் வழங்கப்படாத நிலையில் பிரதேசச் செயலாளர் சுய நலத்துடன் செயற்பட்டமை குறித்து மூன்றாம் பிட்டி கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மூன்றாம் பிட்டி கிராமத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பொது அமைப்புக்கள் செயற்பட்ட நிலையில் குறித்த பொது அமைப்புக்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி குறித்த அமைப்புக்களை செயல் இழக்கச் செய்து தற்போது எமது கிராமத்தில் காணி அபகரிப்பக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , குறித்த நடவடிக்கைகளை மாகாண சபையூடாகவும், குறிப்பாக வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு 3 ஆம் பிட்டி சந்திக்கு அருகில் இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கி வைப்பு-வடமாகாண சபை உறுப்பினர் நேரடி விஜயம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
August 24, 2016
Rating:
No comments:
Post a Comment