2009ம் ஆண்டுக்குப் பின் 19,527 ஏக்கர் நிலம் படையினர் வசம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு பின்னர் 7 ஆண்டுகளில் மட்டும் சுமார் 19 ஆயிரத்து 527 ஏக்கர் தமிழ் மக்களுடைய நிலம் சிங்கள குடியேற்றங்களுக்காகவும் படையினர் தேவைக்கெனவும் கூறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் புள்ளிவிபரங்களுடன் சுட்டிக்காட்டுகிறார்.
இதனைவிட சுமார் 1451 ஏக்கர் தமிழ் மக்களுடைய நிலங்களை அவர்கள் பயன்படுத்த முடியாதவாறு தடை விதித்து வனவள பாதுகாப்பு திணைக்களம் அநீதி இழைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்களுடைய நிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிங்கள குடியேற்றங்கள் மற்றும் படையினர் அபகரித்திருக்கும் தமிழ் மக்களுடைய நிலங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
இந்த அறிக்கைக்கான இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பின்போதே மேற்படி தகவல்கள் வெளியாகி உள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அறிக்கைக்கான முதற்கட்ட தகவல் சேகரிப்பில் 4713 ஏக்கர் நிலம் படையினராலும் சிங்களக் குடியேற்றங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரண்டம் கட்ட தகவல் சேகரிப்பில் படையினர் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலம் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளது என ரவிகரன் கூறியுள்ளார். மாவட்ட செயலகத்தின் தகவல்கள் இதனை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் குறிப்பிடப்படாமல் உள்ள அலம்பில் - கனடியன் வீதி 30 ஏக்கர், வட்டுவன், நிராவியடி வயல், உலத்துவெளி ஆகிய 3 பகுதிகளில் 45 ஏக்கர், திருமுறிகண்டி 1703 ஏக்கர், கொண்டுதொடுவாய் 170 ஏக்கர் ஆகியன உள்ளடங்கலாக சுமார் 16 ஆயிரத்து 110 ஏக்கர் நிலம் படையினர் வசம் உள்ளது.
அத்துடன் மகாவலி அதிகார சபையினால் தமிழ் மக்களுடைய நிலம் 2524 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் கோட்டைகேணி பிள்ளையார் கோவிலடியில் உப உணவு பயிர்செய்கை நிலம் 825 ஏக்கர், கொக்கிளாய் விகாரை நிலம் 4 ஏக்கர், கொக்கிளர் இல்மனைட் தொழிற்சாலைக்காக எடுக்கப்பட்டுள்ள நிலம் 44 ஏக்கர், கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் சிங்கள மக்கள் உள்ள நிலம் 2 ஏக்கர் என 3399 ஏக்கர் மற்றும் தமிழ் மக்களுடைய விவசாய நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இவற்றைவிட நிந்தகைகுளம் பகுதியில் தமிழ் மக்களின் ஆளுகையில் இருந்த சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பு தமக்குரியதென வனவள பாதுகாப்பு திணைக்களம் அடையாளப்படுத்தி அந்நிலத்தை மக்களிடம் வழங்க மறுத்துவருகிறது.
மேலும் கருவேப்பம்முறிப்பு குளம் 201 ஏக்கர், பாலங்குளம் 150 ஏக்கர், துவரங்குளம் 200 ஏக்கர் என மொத்தமாக 1451 ஏக்கர் நிலம் ஆகியவை உள்ளடங்கலாக மொத்தமாக சுமார் 20 ஆயிர த்து 958 ஏக்கர் தமிழ் மக்களுடைய பல்வேறு வழிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை இரண்டாம் கட்ட தகவல் சேகரிப்பின்போது தெரிவவந்துள்ளது எனவும் ரவிகரன் சுட்டிக்காட்டுகிறார்.
இந்நிலை நீடித்தால் கிழக்கு மாகாணத்தின் சில மாவட்டங்கள் எப்படி திட்டமிட்டு படிப்படியாக சிங்கள மயப்படுத்தப்பட்டனவோ அதே நிலை முல்லைத்தீவு மாவட்டத்திலும் உருவாகும்.
தொடரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை கண்டுகொள்ளாம் இருந்தால் முல்லைத்தீவு வெகு விரைவில் சிங்களப் பெரும்பாண்மை மாவட்டமாக மாற்றப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்டத்தின் ஒட்டுமொத்த நில அபகரிப்புக்கள் குறித்த முழுமையான அறிக்கையை நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்.
அந்த அறிக்கை மிக விரைவில் ஒரு புத்தகமாக்கப்பட்டு வடமாகாண முதலமைச்சர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வட மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்படும்.
இவ்வாறு ஆக்கிரமிப்புக்களை அப்பலப்படுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ரவிகரன் மேலும் தெரிவித்தார்.
2009ம் ஆண்டுக்குப் பின் 19,527 ஏக்கர் நிலம் படையினர் வசம்
Reviewed by NEWMANNAR
on
August 25, 2016
Rating:

No comments:
Post a Comment