யாழ். பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் நிறுவ அனுமதி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஹோட்டல் முகாமைத்துவ பட்டப்படிப்பு அலகினை மன்னார் மாவட்டத்தில் நிறுவ வேண்டுமென உயர்கல்வி அமைச்சரிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் சிறந்த பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விளங்குகின்றது.
அதேபோல் கிளிநொச்சியில் இரு துறைகளும் வவுனியாவில் ஓர் வளாகமும் இயங்குகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஓர் அலகு ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் கிடைத்துள்ளது.
இந்நிலையில், மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தியைக் கருத்தில்கொண்டு இந்தக் கோரிக்கையினை உயர்கல்வி அமைச்சர் லகஷ்மன் கிரியெல்லவிடம் விடுத்திருந்தேன்.
இதனை ஆராய்ந்த அமைச்சர், தற்போது அதற்கான அனுமதியைத் வழங்குவதற்கு கொள்கை அளவில் இணங்கியுள்ளதோடு, அமைவிடத்தைக் கோரியிருந்தார்.
இதற்குப் பொருத்தமான கட்டடத்தை இனங்கண்டோம். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் இடம்பெறும் நிலையமாக தற்போது பயன்பாட்டில் உள்ள மன்னார் சென்சேவியர் கல்லூரிக்கு முன்னாள் உள்ள கட்டடத்தையே நாம் தெரிவுசெய்துள்ளோம்.
அதனை எமது மாவட்ட இளைஞர்களின் மேம்பாட்டுக்கு விடுவித்து உதவ முடியுமா என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரிடம் நேரடியாகக் கோரியிருந்தேன்.
அதனை விடுவிப்பதற்கான முறையான ஒழுங்கை மேற்கொள்வதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கடந்த வாரம் தெரிவித்ததற்கு அமைவாக, மேற்கொண்டு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
முதல்தடவையாக ஹோட்டல் முகாமைத்துவ பட்டப்படிப்புக்கான அலகை நிறுவ உயர்கல்வி அமைச்சர் இணங்கியதையடுத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் எதிர்வரும் வாரம் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்து, அதனை ஆரம்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என கூறியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் நிறுவ அனுமதி!
Reviewed by NEWMANNAR
on
September 27, 2016
Rating:

No comments:
Post a Comment