வெருகலில் அம்மன் ஆலயம் பௌத்த பிக்கு ஒருவரால் எரிப்பு - பெரும் பதற்ற நிலை
திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் கல்லடி கிராமத்திலுள்ள மலைநீதியம்மன் கோயிலின் மடப்பள்ளி பௌத்த பிக்கு ஒருவரினால் எரிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 10.30 மணியளவில் காவியுடை தரித்த நபர் கோயிலின் மடப்பள்ளிக்குத் தீவைத்து விட்டு அருகிலுள்ள ரஜமகா விகாரைக்குள் சென்று புகுந்து கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக கிராம உத்தியோகத்தர் கனகசுந்தரம் ஜெயரூபன் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து சேருநுவர பொலிஸாரும் விஷேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து பதற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சேருநுவர ரஜமஹா விகாரையில் ஊழியம் செய்யும் ஒருவரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீவைப்பினால் மடப்பள்ளி முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் மடப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கோயில் பொருட்கள் அனைத்தும் தீயினால் முற்றாக எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,குறித்த கோயில் 2009ஆம் ஆண்டும் பௌத்த பிக்கு ஒருவரால் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குறித்த கிராமங்களைச் சுற்றி பொலிஸாரும் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெருகலில் அம்மன் ஆலயம் பௌத்த பிக்கு ஒருவரால் எரிப்பு - பெரும் பதற்ற நிலை
Reviewed by NEWMANNAR
on
September 27, 2016
Rating:

No comments:
Post a Comment