துரத்தி பிடிக்க முடியாவிட்டால் 1000 சீசீ மோட்டார் சைக்கிள் எதற்கு? யாழ் கொலைக்கு மனோ ஆதங்கம்....
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ் மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற “அரசசேவை உங்களுக்காக” என்ற தொனிப்பொருளிலான நடமாடும் சேவையில் கலந்துக்கொண்ட போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் படுகொலைகள் என கருத வேண்டிய சாட்சியங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
பொலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்திப் பிடிப்பதற்கே பொலிஸாருக்கு அதி நவீன 1000சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
Go to Videos
Minister Mano Ganeshan Speech
காவலரணில் நிறுத்தாமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துக்கொண்டு போனதாக தகவல் இல்லை. இந்த நிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை.
ஆகவே அவர்களை துரத்தி சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும், பின்னர் முழங்காலுக்கு கீழேயும் சுட வேண்டும் என்ற விதிகள் மூன்றாம் வகுப்பு குழந்தைக்கும் தெரியும். இவை பயிற்சி பெற்ற இந்த பொலிஸாருக்கு தெரியவில்லை.
சில வாரங்களுக்கு முன் மலையகத்தில் புஸ்ஸல்லாவையில் ஒரு இளைஞர் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார். இப்போது யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
நேற்று முதல் நாள் வரை இந்த நாட்டிற்கு விஜயம் செய்திருந்த ஐ.நா சபையின் சிறுபான்மை விவகார அறிக்கையாளர் ரீட்டா ஐஷக் இங்கே இருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் இன்னமும் நிலைமை கேவலமாக இருந்து இருக்கும்.
எங்களுக்கு இராணுவம் வேண்டாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சிவில் பொலிஸ் எங்கள் நண்பர்கள் என்று இன்று சொல்ல தொடங்கி இருக்கும் யாழ்ப்பாணத்து மக்களை மீண்டும் பொலிஸ் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கும் சம்பவங்கள் இவை.
பொலிஸ் துறை தொடர்பில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் செய்தோர் மீது கடும் நடவடிக்கைகள் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
துரத்தி பிடிக்க முடியாவிட்டால் 1000 சீசீ மோட்டார் சைக்கிள் எதற்கு? யாழ் கொலைக்கு மனோ ஆதங்கம்....
Reviewed by Author
on
October 22, 2016
Rating:

No comments:
Post a Comment