அண்மைய செய்திகள்

recent
-

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் சட்டத்தை கையிலெடுப்பதா? சுரேஸ் பிறேமச்சந்திரன்....


யாழ் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேற்படி சூட்டுச் சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அவசரகாலச் சட்டம் இல்லாத ஒரு சூழ்நிலையில் சுடுவதற்கான அதிகாரங்களை பொலிஸ் எங்கிருந்து பெற்றுக்கொண்டது? சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பதற்காக பொலிஸார் கடமையாற்றுகின்றனரா என்ற கேள்வியை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது கேட்டு நிற்கின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறுபட்ட தேவைகளின் நிமித்தம் இரவில் மிக விரைவாக சென்றிருக்கலாம். இருட்டில் பொலிஸார் நிறுத்துகின்ற போது, மோட்டார் சைக்கிள் நிறுத்தக்கூடிய விடயமும் அல்ல. அம்மாணவர்கள் தப்பித்துச் செல்வதாக இருந்தால், கைது செய்வதற்கான வழி முறைகள் பொலிஸாரிடம் இருக்கின்றது.

மேலும், இந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் கூட அது நிறைவேற்றப்படாமல் நீண்ட நாட்களாக சிறைத் தண்டையைத்தான் அனுபவித்து வருகின்றனர்.

இந்தப் பின்னணியில் இரண்டு அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகம் என்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது ஆகும். சம்பந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் பொழுது நெஞ்சிலே குண்டடிபட்டுத்தான் அந்த மாணவன் இறந்திருப்பதாக அவரது பெற்றோரும் வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் போயிருக்கக் கூடுமாக இருந்தால், குண்டுகள் முதுகில் துளைத்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.

ஆனால் நெஞ்சில் குண்டுகள் பாய்ந்திருப்பதானது எதிரில் நின்று துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இந்த சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தையே எழுப்புகின்றது. அவ்வாறு நடந்திருக்குமாயின் யாழ்ப்பாணத்தைக் கலவர பூமியாக்க பொலிஸாரின் பின்னணியில் யாராவது இயங்குகின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது.

அண்மைக் காலத்தில்தான் மக்கள் சுயமாக தமது கோரிக்கைகளுக்கான குரலை வெளிக் காட்டும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்களானது பொலிஸார் மீதும் சட்டம் - ஒழுங்கின் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனங்களை ஏற்படுத்துவதுடன் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் அச்சத்தின் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை மேலும் அச்சத்திற்குள்ளாக்கும் நிகழ்ச்சியாக பார்க்கக் கூடியதாக இருக்கின்றது..

இலங்கையில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவது என்பது மிகமிகக் கடினமான ஒரு செயலாகும். பல இலட்சம் மாணவர்களுடன் போட்டியிட்டு சில ஆயிரம் மாணவர்களே பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகின்றனர். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பப் பின்னணயிலிருந்து வந்திருக்கும் இந்த மாணவர்களின் இறப்பு என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடியதொன்றல்ல. தமது பெற்றோரை, சகோதர சகோதரியை எதிர்காலத்தில் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்புக்களைக் கொண்ட இவர்களது இழப்பு, ஈடு செய்ய முடியாதது.

இந்த நிலையில் ஒன்று இத்தகைய துப்பாக்கிப் பிரயோகம் ஏன்? எதற்காக? எந்தப் பின்னணியில் நடத்தப்பட்டது என்பது தெளிவு படுத்தப்படவேண்டும் என்பதுடன், பலியாகிப்போன மாணவர்களின் குடும்பத்தவருக்கு ஒரு முழுமையான நட்ட ஈடும் செலுத்தப்பட வேண்டும். அது மட்டுமன்றி, எதிர் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது என்பதையும் அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

மாணவர்களின் பிரிவால் வாடும் பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் உடன் கல்வி பயிலும் மாணவர்களுக்கும், இவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் சட்டத்தை கையிலெடுப்பதா? சுரேஸ் பிறேமச்சந்திரன்.... Reviewed by Author on October 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.