வடக்கு மாகாண சபையைப் புகழ்ந்து பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர்....
கல்வி அபிவிருத்திக்காகச் சுமார் 69 பில்லியன் ரூபா ஒன்பது மாகாணங்களுக்கும் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
அதிலே சுமார் 4100 மில்லியன் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. வடமாகாண சபை தான் கல்வி அபிவிருத்தியில் கட்டட வேலைகளில் அதிக அக்கறை எடுத்துச் செயற்பட்டு வருகிறது.
வடக்கு மாகாண சபையின் சேவை தொடர்ந்தும் இந்தப் பகுதி மக்களுக்குக் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்.
கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 7 ஏ முதல் 9 ஏ வரையான பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கானதும், சிறந்த அதிபர்களுக்குமான கெளரவிப்பு விழா இன்று காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் ஆளுநர் ஊடாகத் தான் வடக்கு மாகாணத்தில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று வந்தன.
இன்று வடமாகாண சபை இயங்குகின்ற காரணத்தால் கல்வியமைச்சர் அதனுடைய செயலாளர், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் உட்படக் கல்வியமைச்சின் அனைத்து உயரதிகாரிகளும் கல்வியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையாகவிருக்கிறார்கள்.
இதற்காகப் பல செயற்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
வடமாகாணத்தின் கல்வி நிலை கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த போதும் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இலங்கையில் அறிவுள்ள பாடசாலை என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அதற்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்றது.
வடமாகாணம் தான் பாடசாலை அபிவிருத்தியில் முதலிடத்திலிருக்கிறது எனவும், இது பாராட்டுதற்குரிய விடயம் எனவும் இந்த நிகழ்வின் போது நான் தெரிவித்திருந்தேன்.
ஒரு பாடசாலையின் அபிவிருத்தி என்பது வெறுமனே ஒரு கட்டட வளர்ச்சியுடன் மாத்திரம் அமைந்து விடாது.
ஆசிரியர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் என அனைவரதும் ஒத்துழைப்புடன் தான் கற்றலை மேம்படுத்த முடியும்.
ஆகவே, வடமாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு நீங்கள் எல்லோரும் சேர்ந்து உதவுங்கள். அதன் மூலம் நல்லதொரு சமூதாயத்தை உருவாக்க முடியும். பாடசாலையில் கல்வியை மாத்திரம் போதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்க விடயமன்று.
ஆகவே, நாங்கள் இன்று பல்கலைக் கழகங்களில் பல புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகின்றது.
தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கல்வி மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் திட்டத்திற்கான கூட்டங்களில் பிரதமர் சொல்லும் விடயம் இந்த நாட்டிலே பல்கலைக் கழகம் செல்வதற்கு 64 ஆயிரம் பேர் வரை தகுதியுடையவர்களாகவிருந்த போதும் 27 ஆயிரம் பேர் வரை தான் உள்வாங்கப்படுகிறார்கள்.
அவ்வாறெனில் மிகுதி எண்ணிக்கையானவர்களை நாங்கள் என்ன செய்வது? இவர்களுக்குத் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் புதிய கல்வித் திட்டத்திலே 24 புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து வெளியேறும் போது ஏதாவதொரு தொழிலைப் பெற்றுக் கொண்டு வெளியேற வேண்டும் என்ற நோக்கில் செயற்படுகிறோம் எனவும் தெரிவித்தார்.
இந்த விழாவிற்குத் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வடக்கு மாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆர். இரவீந்திரன்,
சிவன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் கணேஸ்வரன் வேலாயுதம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா உட்பட வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கல்லூரி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாண சபையைப் புகழ்ந்து பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர்....
Reviewed by Author
on
October 08, 2016
Rating:

No comments:
Post a Comment