வடக்கின் சுகாதார நிலைமைகள் தொடர்பாக சர்வதேச மாநாடு.
வடக்கின் சுகாதார நிலைமைகள் மற்றும் மேம்பாடு தொடர்பில் ஜனவரி மாதம் கனடாவில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்
கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஒழுங்கமைப்பில் இந்தச் சர்வதேச மருத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது சர்வதேச கலந்துரையாடல் இதுவாகும்.
கனடாவின் ரொறன்ரோ நகரில் ஜனவரி மாதம் 16ஆம், 17ஆம் திகதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுகாதார மற்றும் கல்வி அமைச்சர்கள் உள்ளிட்ட 22 பேர் பயணமாகவுள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சால் மூன்று ஆண்டு கால மூலோபாய அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டது. 16 விடயப் பரப்புக்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
பின்னர் 10 விடயங்களாக அவை தொகுக்கப்பட்டன. பத்து விடயங் களிலிருந்து 5 விடயங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.
உள சுகாதாரம், சிறப்புத் தேவைக்குரியவர்களின் நீண்ட காலப் பராமரிப்பு, விபத்துக்கள் மற்றும் காயம் ஏற்படுதலைத் தவிர்த்தலும் அவசர சிகிச்சையும், சுகாதாரத் தகவல்களை இலத்திரனியல் மயப்படுத்தல், மனித வள அபிவிருத்தி ஆகியவையே முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசின் நிதி உதவி மாத்திரம் போதாது. வெளிநாட்டு உதவிகளும் தேவை. கனடா, அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே, அவுஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள், துறைசார்ந்த நிபுணர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம், நிதி வங்கிகள் பலவற்றில் தமிழர்கள் மிகப் பெரிய பதவிகளில் உள்ளனர். அவர்களும் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எமது மருத்துவக் குழுவினர் வடக்கின் தேவைகள் தொடர்பில் தெரியப்படுத்துவர். அதன் பின்னர் அதற்கு எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்பது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்படும்.
இதன் மூலம் வடக்கின் சுகாதார அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும். இதற்கு வடக்கு ஆளுநர், மத்திய அரசின் அனுமதிகள் கிடைத்துள்ளன என வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மேலும் தெரிவித்தார்.
வடக்கின் சுகாதார நிலைமைகள் தொடர்பாக சர்வதேச மாநாடு.
Reviewed by NEWMANNAR
on
December 21, 2016
Rating:

No comments:
Post a Comment