வரலாற்றுப் பாடவிதானங்களில் புறக்கணிக்கப்படும் தமிழர் வரலாறு!
ஒரு நாட்டின் கட்டமைப்பில் அந்த நாட்டின் பாடவிதானம் என்பது முக்கியமானது. பாடவிதானம் சரியான முறையில் – நாட்டு மக்களுக்கு ஏற்றதாகத் தயாரிக்கப்படவில்லையாயின் அது இந்த நாட்டின் அனைத்துத் தளங்களிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது திட்டமான உண்மை.
இந்த வகையில் சில பாடவிதான தயாரிப்புக்கள் இன ஒற்றுமையை – நல்லிணக்கத்தை தவிடு பொடியாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் கூறித்தானாக வேண்டும்.
அதிலும் குறிப்பாக வரலாற்றுப் பாடத்தை எடுத்துக் கொண்டால், அதில் தமிழர்களின் வரலாறு என்பது முற்று முழுதாக இருட்டடிப்புச் செய்யப்பட்டிருப்பதைக் காண முடியும்.
வரலாற்றுப் பாடம் என்பது இந்த நாட்டின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் படிக்கின்ற கட்டாய பாடமாகும். எனவே கலைத்திட்டத்தில் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ள வரலாற்று பாடத்தில் இலங்கையின் வரலாறு என்பது இன, மத, மொழி பேதமின்றி பிரஸ்தாபிக்கப்பட வேண்டியதாகும்.
வரலாற்றுப் பாடத்தைக் கற்கும் மாணவன் ஒருவன் இந்த நாட்டின் வரலாற்றை அறிந்து கொண்ட திருப்தியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதற்கேற்றாற்போல் நடுநிலையோடு வரலாறு பதிப்பிக்கப்படுவது அவசியமாகும். ஆனால் அதுதான் நடக்கவில்லை. வரலாற்றுப் பாடங்களில் சிங்கள வரலாறு மட்டுமே இடம்பெற்றுள்ளன. மாறாக இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக இருக்கக்கூடிய தமிழ் மக்களினதும் தமிழ் மன்னர்களதும் வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான போக்குகள் தமிழ் மாணவர்களிடையே இந்த நாடு குறித்து வெறுப்பு ஏற்படுவதுடன் சிங்கள மாணவர்களும் இந்த நாட்டை தம் இனம் சார்ந்த மன்னர்களே ஆட்சி புரிந்ததாகவும் தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் என்றும் கருதிக் கொள்வர்.
இங்குதான் வரலாற்றுப் பாடம் இலங்கையில் தமிழ் – சிங்கள மாணவர்களிடையே இனவாதத்தை விதைக்கிறது எனலாம்.
வரலாற்றுப் பாடத்தில் ஈழத் தமிழர்களின் வரலாறுகள் இடம்பெறவில்லை என்று சுட்டிக்காட்டும் போதெல்லாம் பாட விதானப் பிரிவு கூறுவது, வரலாற்றுத்துறை தமிழ்ப் பேராசிரியர்கள் ஒத்துழைப்பதில்லை என்று.
அதேநேரம் வரலாற்றுத்துறைத் தமிழ்ப் பேராசிரியர்கள் கூறுவது, வரலாற்றுப் புத்தகத்தை தயா ரித்துவிட்டே தங்களை அழைக்கின்றனர். சிங்களத்தில் தயாரிக்கப்பட்ட வரலாற்றுப் பாடத்தை தமிழில் மொழி பெயர்ப்புச் செய்யும் நோக்குடனேயே எங்களுக்கான அழைப்பு இருக்கின்றது என்று.
எனவே தமிழர்களின் வரலாறு பாடப்புத்தகங்களில் இடம்பெறுவதற்கு வரலாற்றுத்துறை சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் ஒத்துழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அபத்தமானது என்பது நிரூபணமாகிறது.
இதேவேளை தொடர்ந்தும் வரலாற்றுப் புத்தகங்களில் தமிழர் வரலாறு புறக்கணிக்கப்படுமாயின் மொழி, சமயம் போன்று வரலாற்றுப் பாடமும் அமைய வேண்டும் என்ற கோரிக்கை எழுவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.
அதாவது தமிழ் மாணவர்கள் தமிழையும் சிங்கள மாணவர்கள் சிங்களத்தையும் கற்பதுபோல; ஒவ்வொரு சமயத்தவர்களும் தத்தம் சமயப் பாடங்களைப் படிப்பது போல, வரலாற்றுப் பாடத்தையும் சிங்களவர்கள் தமது வரலாற்றையும் தமிழர்கள் தங்கள் வரலாற்றையும் படிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழர் தரப்பில் இருந்து எழுவது நீதியானதாகவே அமையும்.
ஆகையால், இனவாதப் போக்குகளை பாட விதானங்களில் காட்டி இந்த நாட்டை குட்டிச் சுவராக்காமல், இலங்கைத் தீவு இன ஒற்றுமை மிகுந்த நாடு என்று உலகம் போற்றுமளவில் பாட விதானங்களை தயாரிப்பது மிகவும் அவசியமாகும்.
வரலாற்றுப் பாடவிதானங்களில் புறக்கணிக்கப்படும் தமிழர் வரலாறு!
Reviewed by NEWMANNAR
on
December 13, 2016
Rating:

No comments:
Post a Comment