முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முற்றுகையிட்டு பட்டதாரிகள்......
வேலை வாய்ப்பினைக் கேட்டுப் போராடும் இளைஞர், யுவதிகளின் பிரச்சினைகள் தீர இறைவன் வழிவகுப்பானாக என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றைய தினம், வட மாகாண சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை முற்றுகையிட்டு பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களுடன் பேசியதன் பின்னர், வடக்கு முதல்வர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சில முக்கியமான விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
குறிப்பாக, இது போன்ற போராட்டம் கொழும்பில் ஜனாதிபதி காரியாலயத்தின் முன்னரோ பிரதமர் அலுவலகத்தின் முன்னரோ தான் நடைபெறவேண்டும்.
வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது.வேலை பெற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கப் போகும் மத்திய அரசாங்கமே அதைச் செய்யவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதாவது, இது போன்ற பிரச்சினைகளுக்கு மத்திய அரசாங்கம் தான் பொறுப்பு என்பதைத் தெரிவித்திருக்கும் அவர், அதிகாரத்தில் இருக்கும் மத்திய அரசாங்கம் கவனம் எடுத்தால் மாத்திரமே இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும், அதற்கு அவர்கள் மனது வைக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெறும் வாக்குறுதிகளை மட்டுமே எங்களால் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், 1500 வெற்றிடங்கள் இருப்பதையும் அதற்கு மத்திய அரசு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்வழி வடக்கு முதல்வர் மீண்டுமொரு உண்மை நிலையினை வெளிப்படுத்தியிருக்கிறார். மாகாண சபை என்று ஒன்று இருந்தாலும், அதில் அதிமான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வைத்திருப்பதனையும், போராடுபவர்களுக்கு மாகாண சபையின் மூலமாக தீர்வு காணமுடியாமல் இருப்பதனையும் அவர் மறுபடியும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
மத்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக குறிப்பிடும் முதல்வர், அதற்கு அவர்கள் சரியான பதிலை வழங்கியிருந்தாலும் இன்னமும் தீர்வினை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இது வடக்கு முதல்வரின் தனியே பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கான அறிக்கையாக மட்டும் இல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் தளம் சார்ந்ததுமானதாகவே இருக்கின்றது.
ஏனெனில் இந்த அறிக்கையில் இன்னொரு விடயத்தினையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதாவது, அண்மையில் முதலமைச்சர்கள் மாநாட்டின் போது எம் பலதரப்பட்ட மக்கள் செய்து வரும் தொடர் போராட்டங்கள் பற்றி பிறமாகாண முதலமைச்சர்கள் முற்றிலும் அறியாமல் இருந்தமை எந்தளவுக்கு நாங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணர வைத்தது என்பதனையும் குறிப்பிட்டிருக்கிறார்.
வடக்கில் பல மாதங்களாக தமிழ் மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள்.
ஆனால் தெற்கில் இருக்கும் மற்றைய முதலமைச்சர்கள் எவருக்கும் அது சென்று சேரவில்லை என்பதையும், அதன் மூலம் நாங்கள் எங்கள் பிரச்சினைகளை நினைத்து போராடுகின்றோம்.
ஆனால் தெற்கு அரசியல் வாதிகள் இவற்றைக் கண்டு கொள்வதில்லை என்றும், அது பற்றி அலட்டிக் கொள்வதில்லை என்பதும் தெளிவாகின்றது.
இந்நிலையில் தான் வடக்கு முதலமைச்சர் வெளிப்படையான தனது அறிக்கையில் இவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மிகவும் யதார்தமான அந்த அறிக்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெறுவதற்கு மாகாண சபையின் அதிகாரங்கள் போதாது என்பதனை வெளிப்படுத்தி நிற்கின்றன.
பதவிகள் இருப்பினும், மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அதிகாரம் மேலிடத்தில் தான் உண்டு என்பதை காட்டியிருக்கிறார் வடக்கு முதல்வர். அதனை அவர், “ வெறும் சிபார்சு செய்யும் அதிகாரம் கொண்ட எங்களால் வேலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது” என்று அந்த அறிக்கையில் தெளிவாக்கியிருக்கிறார்.
உண்மையில் நிலமையில் வடக்கு மாகாண சபையும் வடமாகாண முதல்வரும் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேசும் அவர்கள், அவர்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு மத்திய அரசாங்கத்தோடு பேசுகிறார்கள்.
மத்திய அரசாங்கத்தோடு பேசச் சென்ற தமிழர் பிரதிநிதிகளுக்கு அவர்கள் வாக்குறுதிகளைக் கொடுத்து அனுப்புகிறார்கள். ஆனால், தீர்வு தான் இன்னமும் கிடைக்கவில்லை.
இதே நிலை தான் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வாக்குறுதிகளை மட்டும் வழங்கிவிட்டு இருக்கிறது ஆளும் அதிகார வர்க்கம். பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக நிற்கிறது.
வடக்கு முதல்வரின் அறிக்கையில், விரைவில் இளைஞர் யுவதிகளின் பிரச்சினைகள் தீர இறைவன் வழி வகுப்பானாக என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தினை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழ் மக்களை இனி அந்தக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று தன்னுடைய கருத்தினை தந்தை செல்வா வெளியிட்டிருந்தார்.
அன்று இலங்கை அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலமை குறித்து தந்தை செல்வா அவ்வாறு உரைத்தார் எனில், இன்று போராடும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அரசாங்கம் தீர்வு தருவது என்பது கல்லில் நார் உரிப்பதைப் போன்றது.
எனவே கடவுள் மேல் தன்னுடைய பாரத்தை போட்டுக் கொண்டு, தமிழர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பதவிகளில் எந்த அதிகாரங்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு போதாது என்பதை வெளிப்படுத்திவிட்டிருக்கிறார்.
இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இந்தத் தெருவோறப் போராட்டங்கள். அதற்கு கடவுள் வந்தால் அல்ல, மத்திய அரசாங்கம் மனது வைத்தால் தான். அது நடக்குமா என்பது தான் பிரச்சினையே.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முற்றுகையிட்டு பட்டதாரிகள்......
Reviewed by Author
on
May 10, 2017
Rating:

No comments:
Post a Comment