ஒரே குடும்பத்தில் மூவர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை.....
வவுனியா மாவட்ட மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த மூன்று முக்கிய கொலை வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து நபர்களுக்கு எதிராக சந்தேகத்திற்கு இடமின்றி வழக்கு விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் எதிரிகளுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
மேற்படி வழக்குகள் நேற்று வியாழக்கிழமை வவுனியா மாவட்ட மேல் நீதிமன்றில் நடைபெற்ற போதே நீதிபதியால் இவ்வாறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவது,
சுந்தரபுரம் சுகந்தன் கொலை வழக்கு
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி 24 வயதுடைய கந்தசாமி சுகந்தன் என்ற இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக சுந்தரபுரத் தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்களான தந்தையான குட்டப்பன் வேலாயுதம் அவரது புதல்வர்களான வேலாயுதம் தினேஸ்குமார், வேலாயுதம் மனோஜ் ஆகியோர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில்,
இந்த வழக்கு தீர்ப்புக்காக நேற்று வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றவாளிகள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளமையால் மூன்று பேருக்கும் நீதிபதியினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட இளைஞரது குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மூன்று முறிப்பு கொலை வழக்கு
வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் கட ந்த 2010ஆம் ஆண்டு ஆராய்ச்சிலாகே தர்மகீர்த்தி என்ற குடும்பத் தலைவர் படுக்கையறையில் வைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேக த்தின் பேரில் அவரது மனைவியான ரோகிணி தமயந்தி என்பவரை கைது செய்து வவுனியா பொலிஸார் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்று வந்த நிலையில்,
கடந்த 2014.01.25 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மாவட்ட மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்க ப்பட்டு விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்றைய தினம் இறுதி தீர்ப்பிற்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்திற்கு இடமின்றி கொலை செய்யப்பட்டவரின் மனைவியே கணவரை எரித்து கொலை செய்துள்ளமை விசாரணையில் நிரூபிக்கப்பட்டமையால் எதிரிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கூழாங்குளம் இந்துமதி கொலை வழக்கு
கடந்த 2008ஆம் ஆண்டு வவுனியா சாத்திரி கூழாங்குளம் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்ததுடன் அங்கிருந்த சிவகுமார் இந்துமதி என்ற பெண்ணை கொலை செய்த குற்றத்துக்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு வவுனியா மாவட்ட நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 2016. 06.02 அன்று வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில்,
நேற்று வியாழக்கிழமை வழக்கு இறுதி விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரியான வி.கனகமனோகரன் என்பவரிற்கு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த குற்றத்திற்காக 10 வருட சிறைத் தண்டனையும் அவ்வீட்டில் இருந்த சிவகுமார் இந்துமதி என்ற பெண்ணை படுகொலை செய்த குற்றம் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதை அடுத்து எதிரிக்கு மரண தண்டனையையும் வழங்கி வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தீர்ப்பளித்துள்ளார்.
மூன்று வழக்குகளிலும் இந்தக் கொலைக் குற்றத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. மின் விசிறிகள் நிறுத்தப்பட்டன. நீதிமன்றத்தில் சமுகம் அளித்திருந்த அனைவரும் எழுந்து நின்றனர். நீதிபதியும் தமது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று மரண தண்டனைத்தீர்ப்புக்களை வாசித்திருந்தார்.
ஒரே குடும்பத்தில் மூவர் உள்ளிட்ட ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை.....
Reviewed by Author
on
June 02, 2017
Rating:

No comments:
Post a Comment