யாழில் இருந்து இராணுவம் துரித கதியில் வெளியேறும்!
இன்றைய தினம் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது. அது விசேட அம்சமாக இருக்கின்றதுடன், தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் செயற்பாடு துரித கதியில் நடைபெற்று வருகின்றதாக எதிர்பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கலந்துரையாடலின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வரும் கலந்துரையாடலின் மூலம் யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு படைத்தரப்பினரிடம் இருக்கும் நிலங்களை விடுவிப்பது தொடர்பில் எவ்வாறான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன என்பது பற்றி ஆராய்ந்து வருகின்றோம்.
தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. கடந்த காலங்களில் அரச காணிகள் என பல தனியார் காணிகளை எடுத்து இருக்கின்றார்கள். தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறி தமது முகாம்களை அமைப்பதற்கான சில இடங்களை பிரதேச செயலாளர்கள் அடையாளம் காட்டியுள்ளார்கள்.
மக்கள் செறிவாக வாழ்க்கின்ற பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்ய முடியும். அந்த இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டுள்ளது. அது விசேட அம்சமாக இருக்கின்றது. இருந்தும், கடற்கரை வீதி மற்றும் பலாலி வீதி, டச் வீதி, இளவாலை வீதி உள்ளிட்ட வீதிகளை திறப்பதாகவும் உறுதியளித்துள்ளார்கள்.
அத்துடன், தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் செயற்பாடு துரித கதியில் நடைபெற்று வருகின்றதாக எதிர்பார்க்கின்றோம்.
அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்க பிரதேசம் மற்றும் சில பிரதேசங்கள் விடுவிப்பதாக தீர்மானித்து விட்டார்கள். இருந்தும் அந்த விடுவிப்புக்கள் எப்போது என்ற கேள்வி எழுகின்றது.
சில பகுதிகளை 3 மாத காலத்திற்குள் விடுவிப்பதாக கூறியுள்ளார்கள். அதிலும் ஓரிரு இடங்கள் சில நாட்களில் விடுவிப்பதாக சொல்லி இருக்கின்றார்கள்.
மிக துரிதமாக மீண்டும் காணிகள் விடுவிப்பு இடம்பெறும். இராணுவ முகாம்களை மாற்ற வேண்டுமாயின் அரசாங்கம் அதற்கான நிதியை வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி வந்தோம்.
இந்த நிலையில் தனியார் காணிகளை விடுவிப்போம் என்ற தீர்மானத்தினை எடுத்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதை வெற்றியாக கருதுகின்றோம் என தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் உட்பட 15 பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இருந்து இராணுவம் துரித கதியில் வெளியேறும்!
Reviewed by Author
on
July 04, 2017
Rating:

No comments:
Post a Comment