பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற முயற்சி! அமெரிக்காவால் அழிக்கப்பட்ட கப்பல்கள்...
இறுதிக்கட்ட போரின் போது கடைசி நேரத்தில் சிக்கியிருந்த மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்காவால் முயற்சிக்கப்பட்டது. எனினும் இலங்கை அரசாங்கத்தினால் அது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்க முயற்சிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வொசிங்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற, விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்தது.
எனினும், நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மையும், என்னையும் விடுதலைப் புலிகள் பணயக்கைதிகளாகப் பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சத்தினால், இலங்கை அரசாங்கம் அந்த யோசனையை முன்னெடுக்க மறுத்து விட்டது. ஆனால், சொல்ஹெய்மையும், என்னையும் விடுதலைப் புலிகள் பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொள்வார்கள் என்று நான் நம்பவில்லை.
இது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்கின்ற முயற்சி என்றும் கூட உணர்வுகள் இருந்தன. ஆனால், அமெரிக்க கடற்படைப் படகுகள் மூலம், ஒவ்வொருவரையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதே இந்த திட்டமாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடிக்க அமெரிக்கா உதவியதாக, இன்னொரு விவாதம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கு நாம் இலங்கைக்கு உதவினோம். அந்நாட்டு கடற்படை தான் உண்மையில் அவற்றை தாக்கி அழித்தது.
விடுதலைப் புலிகளுக்கு உதவும் எண்ணம் எமக்கு ஒருபோதும் இருக்கவில்லை.
போர் அரங்கில் இருந்து தெற்குப் புறமாக வெளியேறுவதற்கு மக்களை விடுதலைப் புலிகள் அனுமதிக்காததால், அவர்கள் மனித கேடயங்களாகும் நிலையைக் கருத்தில் கொண்டே, இந்த மீட்பு திட்டம் வகுக்கப்பட்டது” என்றும் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பணியாற்றிய அமெரிக்க தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த அமெரிக்கர்கள் அங்கம் வகிக்கும் செரன்டிபிடி என்ற அமைப்பின் கூட்டத்தில் ரொபேர்ட் ஓ பிளேக் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற முயற்சி! அமெரிக்காவால் அழிக்கப்பட்ட கப்பல்கள்...
Reviewed by Author
on
July 03, 2017
Rating:
Reviewed by Author
on
July 03, 2017
Rating:


No comments:
Post a Comment