வடக்கில் திட்டமிட்ட குடியேற்ற பகுதிகளை சிவப்பு பகுதிகளாக அடையாளப்படுத்த கோரிக்கை...
வட மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படு வரும் பகுதிகளை சிவப்பு (அபாய) பகுதிகளாக அடையாளப்படுத்தி தொடர்ந்து அவதானிக்க வேண்டுமென வட மாகாண சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சபையின் 100ஆவது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போதே மாகாண சபை உறுப்பினர்களான அயூப் அஸ்மின் மற்றும் து.ரவிகரன், இ.ஆனோல்ட் ஆகியோர் மேற்படி கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கூறுகையில்,
வெலி ஓயா, போகஸ் வௌ, ஒயாமடுவ பகுதிகளுக்கு அண்மையில் சென்றிருந்த போது அங்கே குடியேற்றப்படும் மக்களுக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம், கால் ஏக்கர் குடியிருப்பு நிலம், தற்காலிக வீட்டு திட்டத்திற்காக 25 ஆயிரம் ரூபா பணம்,
2 ஆடுகள், ஒரு தையல் இயந்திரம், ஒரு நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் ஒரு நீர்த்தாங்கி இதனோடு 6 மாதங்களுக்கான நிவாரணம் வழங்கப்படுகின்றமையை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில் மேற்படி பிரதேசங்கள் மீது குறிப்பாக அவை அடங்கும் பிரதேச செயலக அதிகாரிகள் மீது தொடர்ச்சியான கவனத்தை நாம் செலுத்த வேண்டும் என கோரினார்.
இதைத்தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கூறுகையில்,
மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குறிப்பிட்டிருந்த பகுதிகளுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்து காணிகள் மற்றும் கரைத்துறைபற்று பிரதேசத்து காணிகளும் எடுக்கப்படுகின்றன.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு சென்றிருந்த போது அங்கே தமிழ் மக்களுக்கு சொந்தமான மானாவாரி பயிர்ச்செய்கை காணிகளை திட்டமிட்ட குடியேற்றத்தின் ஊடாக குடியேற்றப்படும் மக்களுக்கு வழங்குவதற்காக எல்லையிடும் பணிகள் இடம்பெற்றிருப்பதை மக்களுடன் இணைந்து பார்த்தேன்.
ஏற்கனவே மக்களுடைய நீர்ப்பாசன காணிகள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மீதமாக உள்ள மானாவாரி காணிகளையும் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பாக விசேட கவனம் தேவை என கூறினார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் இ.ஆனோல்ட் கூறுகையில், மேற்படி பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடந்து வருகின்றன. இதனடிப்படையில் மேற்படி பகுதிகளை சிவப்பு (அபாயம்) பகுதிகளாக அடையாளப்படுத்தி தொடர்ந்தும் அவதானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் திட்டமிட்ட குடியேற்ற பகுதிகளை சிவப்பு பகுதிகளாக அடையாளப்படுத்த கோரிக்கை...
Reviewed by Author
on
July 29, 2017
Rating:

No comments:
Post a Comment