இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய உப தலைவருக்கு செல்வம் எம்.பி வாழ்த்து...
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்தின் உபதலைவராக ஞானப்பிரகாசம் டேவிட்சன்(ஜெறாட்) தெரிவு செய்யப்பட்டதன் மூலம் தமிழ் தலைமைத்துவத்திற்கு மீண்டும் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக தெரிவு கூட்டமானது அகில உலக மற்றும் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றுள்ளதாக அறிகின்றேன்.
இலங்கையில் 63 லீக்குகள் உள்ளன. இதில் வடக்கில் 09 லீக்குகளும் கிழக்கில் 08 லீக்குகளும் உள்ளன. இந்த 17 லீக்குகளும் ஒற்றுமையாக இணைந்து வெற்றியைத் தீர்மானித்தன. அனுர டி சில்வாவை ஆதரித்து 106 இற்கு 79 என்ற வாக்குகளின் அடிப்படையில் தலைமைத்துவம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன் (ஜெறாட்), உப தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இலங்கை முழுவதுமாக பலமாக இருந்த எதிரணியாகிய றஞ்சித் றொட்றிகோ அணியைத் தோற்கடித்து உப தலைவராக தெரிவாகி மன்னார் மாவட்டத்திற்கும் வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளளார்.
வடக்கு கிழக்கில் உள்ள 17 லீக்குகளும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டுள்ளதன் காரணத்தினால் தமிழராக ஒருவர் வடமாகாணத்தில் இருந்து அதுவும் மன்னார் மாவட்டத்தில் இருந்து இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவுக்காக ஆதரவு வழங்கிய வடக்கு, கிழக்கு உள்ளிட்ட லீக் பிரதிநிதிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக வடக்கில் உள்ள தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாரிய அதிஷ்டமாகவே நான் கருதுவதோடு, தமிழ் தலைமைத்துவத்திற்கு மீண்டும் ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நான் கருதுகின்றேன்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஞானப்பிரகாசம் டேவிட்சனுக்கு(ஜெறாட்) எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவரது வெற்றிக்கு பக்கபலமாக நின்ற அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என கூறியுள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய உப தலைவருக்கு செல்வம் எம்.பி வாழ்த்து...
Reviewed by Author
on
July 03, 2017
Rating:

No comments:
Post a Comment