வடக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு மத்திய அமைச்சு அனுமதி: ப.சத்தியலிங்கம்...
வடக்கு மாகாணத்திலுள்ள குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக வடக்கு சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் நடைபெற்ற சத்திரசிகிச்சை பிரிவு விடுதி மற்றும் வைத்தியர் விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இன்று வழங்கிய செவ்வியில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்திலுள்ள 8 வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பில் கோரிக்கை ஒன்றினை கடந்த வருடம் மத்திய சுகாதார அமைச்சிற்கு அனுப்பியிருந்தோம்.
இந்த விடயம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட தீர்மானமானது மாகாண அமைச்சர் வாரியத்தின் அனுமதியுடன் மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு சபையின் ஆதரவுடன் மத்திய சுகாதார அமைச்சிற்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதில் வவுனியா மாவட்டத்தில் பொது வைத்தியசாலையை மாகாண பொது வைத்தியசாலையாகவும், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்துறை, மல்லாவி மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைகளை தள வைத்தியசாலைகளாகவும், யாழ்பாணம் மாவட்டத்தில் தெல்லிப்பளை தள வைத்தியசாலையை விசேட வைத்தியசாலையாகவும், பருத்தித்துறை தள வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாகவும், மன்னார் மாவட்டத்தில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாகவும் தரமுயர்த்துவது தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று கொழும்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மல்லாவி, புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலைகளை தள வைத்தியசாலைகளாகவும், மன்னார் மாவட்டத்தில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பில் விரைவில் அமைச்சர்கள் மட்டத்தில் கூட்டமொன்று நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிலாவத்துறை, நெடுங்கேணி வைத்தியசாலைகளின் பௌதீக, மனிதவளங்களை அபிவிருத்தி செய்த பின்னர் அவற்றையும் தரமுயர்த்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார.
வடக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு மத்திய அமைச்சு அனுமதி: ப.சத்தியலிங்கம்...
Reviewed by Author
on
August 04, 2017
Rating:
Reviewed by Author
on
August 04, 2017
Rating:


No comments:
Post a Comment