மியான்மரில் இருந்து ஒரே நாளில் 36000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேறினர்....
ரோஹிங்கியா முஸ்லிம்கள் 36 ஆயிரம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி அரசு ஆலோசகராக இருந்து வருகிறார்.
மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினேவில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.
வங்கதேசத்தில் ஏற்கனவே சுமார் 4 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வசித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சுமார் 87 ஆயிரம் பேர் வங்கதேசம் நாட்டின் எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 36 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறி வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
தற்காலிக முகாம்களில் எல்லாம் அகதிகள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் நேற்று வங்காளதேசத்துக்குள் நுழைந்த அகதிகள் அனைவரும் தங்குவதற்கு பாதுகாப்பான இடமின்றி, எல்லையோர கிராமப்புறங்களில் உள்ள வயல்காடுகளிலும், வெட்டவெளிகளிலும் தங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
மியான்மரில் இருந்து ஒரே நாளில் 36000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேறினர்....
Reviewed by Author
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment