யு.எஸ்.ஓபன்: மகளிர் இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்
யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸ் - சான் யுங் ஜான் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.
டென்னிஸ் விளையாட்டின் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் போட்டிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. அதில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் மற்றும் தைவானின் சான் யுங்-ஜான் ஜோடி, செக் குடியரசின் லூசி ரடேக்கா மற்றும் கட்ரினா சினியகோவா ஜோடியை எதிர்கொண்டது.
முதலில் இருந்தே மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அபாரமாக விளையாடியது. முதல் செட்டை 6 - 3 என கைப்பற்றியது. அதேபோல் இரண்டாம் செட்டிலும் மார்டினா ஜோடி அற்புதமாக விளையாடி 6 - 2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இறுதியில் 6 - 3, 6 - 2 என்ற நேர் செட்டில் லூசி ரடேக்கா - கட்ரினா சினியகோவா ஜோடியை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தைவான் வீராங்கனை சான் யுங் ஜானுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஆனால், மார்டினா ஹிங்கிசுக்கு இந்த தொடரில் இது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இவர் ஏற்கனவே கலப்பு இரட்டையர் பிரிவில் பிரிட்டனை சேர்ந்த ஜேம்ஸ் முர்ரேவுடன் விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.
ஹிங்கிஸ் இதுவரை 25 கிராண்டஸாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் ஒற்றையர் பிரிவில் 5 பட்டங்களும், இரட்டையர் பிரிவில் 13 பட்டங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் 7 பட்டங்களும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.எஸ்.ஓபன்: மகளிர் இரட்டையர் பிரிவில் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்
Reviewed by Author
on
September 11, 2017
Rating:

No comments:
Post a Comment