அண்மைய செய்திகள்

recent
-

3 ஆண்டுகளாக தென்னை மரத்தில்......வாழ்ந்திருக்க முடியுமா....


பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 47 வயது கில்பர்ட் சான்செஸ், கடந்த 3 ஆண்டுகளாக தென்னை மரத்தில் வசித்து வந்தார். 60 அடி உயரம் உள்ள தென்னை மரத்தில்தான் சாப்பிட்டார், உறங்கினார், எப்பொழுதாவது குளிக்கவும் செய்தார். கில்பர்ட்டின் வயதான அம்மா, தம்பி, அவரது இரண்டு மகள்கள், ஊர்க்காரர்கள் என்று எவ்வளவு பேர் கெஞ்சிப் பார்த்தும் அவர் கீழே இறங்கவே இல்லை. 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஒரு கலவரம். அதில் துப்பாக்கியால் யாரோ கில்பர்ட்டின் தலையில் அடித்துவிட்டனர். அதிலிருந்து தன்னைக் கொலை செய்யப் போகிறார்கள் என்ற பயம் அவருக்கு வந்துவிட்டது. அலறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவர், தோட்டத்திலிருந்த தென்னை மரத்தில் ஏறிவிட்டார். பயம் தெளிந்த பிறகு கீழே இறங்குவார் என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் அவர் இறங்கவே இல்லை.

“மகன் இப்படி இருப்பதை எந்தத் தாயால் சகித்துக்கொள்ள முடியும்? கெஞ்சிப் பார்த்தேன், அழுது பார்த்தேன், மிரட்டிப் பார்த்தேன். எதையும் அவன் கண்டுகொள்ளவே இல்லை. கீழே இறங்கினால் தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று நினைக்கிறான். அப்படி யாரும் இங்கே கிடையாது. அவன் உயிருடனாவது இருக்க வேண்டும் என்பதற்காக தினமும் தண்ணீர், உணவு, மருந்து, உடை, சிகரெட் ஆகியவற்றை கயிற்றில் கட்டி அனுப்பி வைப்பேன். வாரம் ஒருமுறை கீழே இறங்கி, குளித்துவிட்டு மேலே போ என்று கூட சொல்லிப் பார்த்தேன். அதையும் அவன் கேட்கவில்லை. எப்பொழுதாவது வாளியில் இருக்கும் தண்ணீரை உடலில் ஊற்றிக்கொள்வான். வெயில், புயல் காற்று, மழையிலும் கூட நடுங்கிக்கொண்டே உட்கார்ந்திருப்பான். வேறு மரங்கள் என்றால் கூட கிளைகளில் நடக்கலாம், படுக்கலாம். தென்னை மரத்தில் உட்கார்ந்தபடியேதான் தூங்க முடியும். பூச்சிகள், வண்டுகள் கடித்துக்கொண்டேயிருக்கும். இவனது மனைவி இரண்டாவது பிரசவத்தின்போது இறந்துவிட்டாள். இரண்டு குழந்தைகளையும் இந்தத் தள்ளாத வயதில் பார்த்துக்கொள்வதில் சிரமமாக இருக்கிறது.

குழந்தைகளுக்காக கீழே இறங்குமாறு சொன்னேன். முடியாது என்று சொல்லிவிட்டான். இவனைப் பற்றிய செய்திகள் வெளியே வர ஆரம்பித்தன. பலரும் எங்கள் குடும்பத்தினரின் நிலை கண்டு வருந்தினர். கில்பர்ட்டைக் கீழே கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர். கடந்த 11-ம் தேதி மீட்புப் பணிக்காக 50 பேர் வந்தனர். கிரேன் கொண்டுவரப்பட்டது. மரத்தை வெட்டப் போகிறோம் என்று அவனுக்கு தகவல் கொடுத்தனர். அப்படியும் அவன் இறங்க மாட்டேன் என்றான். வேறு வழியின்றி மரத்தை வெட்டினர். அடிபட்டுவிடுமோ என எல்லோரும் பயந்தோம். நல்லவேளை மரம் மெதுவாக கீழே சாய்ந்தது. அவனை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கினர்.

 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் கால் நிலத்தில் பட்டது. ஆனால் ஊன்றி கூட நிற்க முடியவில்லை. உடல் முழுவதும் கொப்புளங்களாக இருந்தன. மருத்துவமனையில் சேர்த்தோம். அவன் மனநலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால், யாரோ கொல்ல வருவதாகக் கற்பனை செய்துகொள்கிறான். மனநல மருத்துவரிடம் சிகிச்சை ஆரம்பித்திருக்கிறோம். முழுமையாகக் குணமாக சிறிது காலம் ஆகும்” என்கிறார் கில்பர்ட்டின் அம்மா.

எப்படி தென்னை மரத்தில் வாழ்ந்திருக்க முடியும்?
3 ஆண்டுகளாக தென்னை மரத்தில்......வாழ்ந்திருக்க முடியுமா.... Reviewed by Author on October 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.