இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு - ஒட்டாவாவில் நடத்துவதற்கு தீர்மானம் -
இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாட்டை ஒட்டாவாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாநாடு 2018ஆம் ஆண்டு மே மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் சுமார் அறுபது ஆண்டுகளாக தொடரும் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் மே மாதம் 2009 முள்ளிவாய்க்காலில் பெரும் இனஅழிப்பை சந்தித்தது தமிழ் இனஅழிப்புப் போரின் விளைவால் இலங்கைத் தீவில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் தமக்கு உரித்தான மண்ணிலிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. இவ்வாறு தமது மரபுவழித் தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். தமது தேசத்தை விட்டு புலம்பெயர்ந்த போதும் தமது தேசத்துடனான உறவை புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் மிக இறுக்கமாக பேணிவருகிறார்கள்.
இவர்களின் நேரடியான பங்களிப்பும் தார்மீக ஆதரவும் தமிழர் தேசத்தின் மிக முக்கியமான பலமாக திகழ்கிறது. இறுதிக்கட்டப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றை முன்னிறுத்தி, மே மாதம் 2009ற்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு வேலைத்திட்டங்களில் புலம்பெயர் சமூகம் கணிசமான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.
அதேவேளை, ஈழத்தமிழர்களது போராட்டத்தின் நியாயப்பாட்டினை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்லும் முகமாக, காலத்துக்குக் காலம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல மாநாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இவற்றுள் ஒன்றாகவே 1999ல் கனடாவின் ஓட்டாவா நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடும் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்று அம்மாநாட்டில் கலந்து கொண்ட குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம், தாராக்கி சிவராம், ரவிராஜ் உட்பட கணிசமானோர் இன்று எம்முடன் இல்லை.
இவர்கள் போன்ற பலரது தியாகங்களின் அடிப்படையில் வளர்த்துக் காத்து வரப்பட்ட தமிழ் மக்களது போராட்டத்தின் அடிப்படை நியாயப்பாடுகள் இன்று சிங்களப் பேரினவாத மற்றும் சர்வதேச அரசுகளின் நலன்களுக்காகப் பந்தாடப்பட்டுவருகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்பு தீவிரம் பெற்றுள்ளது. அதேவேளை இதையொத்த தீர்மானம் ஒன்றும் வட மாகாண சபையில் ஏகமானதாக 2015ல் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அண்மையில் வெளிவந்த புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையும் தமிழ் மக்களின் பாதுகாப்பினை எந்த வகையிலும் உறுதிப்படுத்தாததுடன், இறுதி அறிக்கையும் தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு அபிலாசைகளை வெளிப்படுத்தாது என்பதனையே அரசாங்கத்தின் நகர்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இவற்றைவிட, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் அங்கமாக, ஈழத்தமிழ் மக்களது பாரம்பரிய நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு, திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நோக்குடனான பௌத்த கோவில்களின் உருவாக்கங்கள் தொடர்கிறன.
இந்நிலையிலேயே தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடரும் இன அழிப்பை உரத்துச் சொல்லவும், தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை மீண்டும் நிலைநிறுத்தவும் வேண்டிய கடப்பாடு எழுந்துள்ளது. இவற்றின் வெளிப்பாடாக புலம் பெயர் தமிழ் சமூகத்தினர் ஒரு கூட்டு முயற்சியாக கனடாவின் தலைநகர் ஓட்டாவாவில் மே மாதம் 2018ல் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாட்டினை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். “தமிழர் தாயகமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும் - நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்” எனும் தலைப்பில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
இலங்கைத் தீவு உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிவியலாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியலாளர்கள் பலரும் கலந்து கொள்ளும் நிகழ்வாக இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் இறுதி நாளின்போது மாநாட்டின் தீர்மானங்களுடன் கனடியப் நாடாளுமன்றில் நாடாளுமன்ற பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு - ஒட்டாவாவில் நடத்துவதற்கு தீர்மானம் -
Reviewed by Author
on
December 23, 2017
Rating:

No comments:
Post a Comment