அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நேற்று விளையாடியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, களம் இறங்கிய இந்திய அணியில், ஸ்மிரிதி மந்தனா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
எனினும், மிதாலி ராஜ் மற்றும் ஜெமிமா ரோட்ரிகியூஸ் ஜோடி, தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. இவர்கள், 2வது விக்கெட்டுக்கு 98 ஓட்டங்கள் சேர்த்தனர்.
மிதாலி ராஜ் 50 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஜெமிமா 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி கட்டத்தில் ஹர்மான்பிரீத் 27 ஓட்டங்கள் எடுக்க, இந்திய மகளிர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீராங்கனைகள் இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் காரணமாக, தென் ஆப்பிரிக்கா 18 ஓவரில் 112 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகபட்சமாக மரிஸன்னே காப் 27 ஓட்டங்களும், குளோ டிரையன் 25 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே, ருமேலி தார், ராஜேஷ்வரி கெயிக்வாட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம், இந்திய மகளிர் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆட்டத்தின் சிறந்த வீராங்கனை மற்றும் தொடரின் சிறந்த வீராங்கனை ஆகிய இரண்டு விருதுகளையும், மிதாலி ராஜ் தட்டிச் சென்றார்.
ஏற்கனவே நடந்த ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!
Reviewed by Author
on
February 25, 2018
Rating:
No comments:
Post a Comment