அண்மைய செய்திகள்

recent
-

சமஷ்டி ஒன்றே சரியான தீர்வு! வடக்கு முதலமைச்சர் கூறும் காரணங்கள் -


தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சமஷ்டியே சிறந்த தீர்வு என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - வெள்ளவத்தையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
“வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மை மக்கள், நாட்டின் பெரும்பான்மை மக்களிடமிருந்து மொழியால், கலாசாரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறுபட்டவர்கள்.

அவர்கள் சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின் படி ஒரு மனிதக் குழுமம் ஆவார்கள். அவர்களுக்கென்று ஒரு நீண்டடிசரித்திரம் உண்டு. வேடர்களுட்பட இவ்விரு மாகாண மக்களுமே இலங்கையின் பூர்வீகக் குடிகள்.
சிங்கள மொழி கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டில் வழக்குக்கு வரமுன் சிங்களம் பேசியோர் இருக்கவில்லை.
ஆகவே வெள்ளையர்கள் நாட்டை 1833ம் ஆண்டில் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் போது இருதரப்பட்ட மக்களை அல்லது கண்டிய சிங்களவரையும் தனியாகச் சேர்த்தால் மூன்று விதமான மக்கள் குழுமங்களை இணைத்தார்கள்.

இன்று பெரும்பான்மையோர் அரசாங்கங்கள் கண்டிய சிங்களவர்களுக்கும் சம அந்தஸ்து அளித்து சிங்கள மக்களை ஒன்றிணைத்துள்ளார்கள். அடுத்து வடகிழக்கைத் தம் வசமாக்க பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன? சமஷ்டியைக் கோரிப் பெறுவது தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரளவிற்குப் பாதுகாக்கப்படும்.
இதனால் தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது. ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்தி விடும். ஆதிக்கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்து விடுவார்கள்.
வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.
அன்றைய சிங்கள மக்கள் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கள் தலைவர்களும் கடைப்பிடித்து வருகின்றார்கள். ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம்.

விட்டுக் கொடுத்தால் நாம் பௌத்த சிங்களவராகவோ பௌத்த தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பிருக்கின்றது.
ஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன்.
அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பது. கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.

சமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந்நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சமஷ்டி ஒன்றே சரியான தீர்வு! வடக்கு முதலமைச்சர் கூறும் காரணங்கள் - Reviewed by Author on July 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.