அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்தின் தந்திரோபாயம் வெற்றிபெற்று விட்டது! சீ.வி. விக்னேஸ்வரன் -


தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருப்பதாலேயே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தடுக்க முடியாதிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இராணுவத்திடமோ அரசாங்கத்திடமோ நன்மைகளைப் பெறும்போது தூரச் சிந்தனையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இல்லையேல், அவர்களின் அன்பின் அடிமைகளாக ஆண்டாண்டு தோறும் அவதியுற நேரிடும் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“ரத்னப்பிரிய பண்டு என்ற இராணுவ அதிகாரி இட மாற்றம் பெற்றுச் சென்றமையும் அவருக்கு தமிழ் மக்கள் கொடுத்த பிரியாவிடையும் எதனைக் காட்டுகின்றது? இராணுவ வீரர் ஒருவரின் மனிதாபிமானத்தையா அல்லது எமது தலைமைகளின் இயலாமையையா?“ என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்து பேசிய அவர், “இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக வடக்கின் இராணுவத் தளபதியாக நியமனம் பெற்று வந்த போது தான் செய்யவிருந்த நடவடிக்கைகள் பற்றி எனக்குக் கூறினார்.
மக்கள் இராணுவத்தை எதிர்க்கின்றார்கள். கடந்தகால அனுபவங்களே அதற்குக் காரணம். நான் அதனை மாற்றி அமைக்கப் போகின்றேன் என்றார். அவர் மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுத்தார்.
கீரிமலையில் வீடுகள் கட்டிக் கொடுத்தது, யாழ். நகரின் சில கரையோரங்களை சுத்தப்படுத்திக் கொடுத்தது போன்ற பல காரியங்களை அவர் செய்வித்தார்.

ஜனநாயக காலத்தில் நாங்கள் மக்களின் மனங்களைக் கவர வேண்டும் என்று இராணுவத்தினருக்குச் சொல்லிக் கொடுத்தார். அவரின் செய்கைகள் எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரப் போகின்றன என்பதை அறிந்ததும் மெளனம் சாதித்தேன்.
ஆனால் அவர்கள் செய்த “நற்செய்கை”களை ஏற்று அவற்றில் பங்கு கொள்ள நான் விரும்பவில்லை. இவ்வாறான செயல்களால் ஏற்படக் கூடிய நீண்ட காலப் பாதிப்புக்களே என்னை ஒதுங்கி இருக்கச் செய்தன.
வீடுகட்டித் தருவதை விமர்சித்திருந்தால் கிடைக்கவிருந்த வீடுகள் தடைப்பட்டிருக்கும். எமது மக்கள் இடரில் வீழ்ந்திருப்பார்கள். எனினும் மக்களுடன் இராணுவத்தினர் சேர்ந்து வாழ முற்பட்டால் மக்கள் அவர்களை ஏற்றதாய் விடும்.

என்றென்றுமே அவர்கள் வட கிழக்கு மாகாணங்களை விட்டு போகமாட்டார்கள். எமக்கிடையேயான சுமூக உறவை ஜெனிவாவில் எடுத்துக் காட்டி “மக்கள் எங்களுடன் தான்” என்று அவர்கள் கூற முடியும்.
இவ்வாறான நடவடிக்கையினால் இராணுவத்தினரைக் குறைக்கவோ மீளப் பெறவோ அவசியம் ஏற்படாது என்ற இராணுவ தந்திரோபாய சிந்தனையில் உதித்ததே இரத்தினப்பிரிய பண்டுவின் நடவடிக்கைகள்.
இராணுவத்தினர் எதிர்பார்த்தது போல் பாதிக்கப்பட்டு நன்மைகள் பெற்ற எம் மக்கள் அந்த இராணுவ நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள் போன்றே தெரிகின்றது.

பொருளாதார நன்மைகளை அரசாங்கத்திடமும், இராணுவத்தினரிடமும் இருந்து பெற விரும்பும் அரசியல்வாதிகளும் மக்களும் ஒன்றை மறந்து விடக் கூடாது. தமக்குப் பலன் இன்றி எந்த அரசியல்வாதியும் எதையும் செய்ய முன்வரமாட்டார்.
ஏற்கனவே எங்கள் அரசியல்வாதிகள் பலர் அரசாங்கத்திடம் இருந்து தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றதாலேயே அவர்களால் காணி கபளீகரம் செய்வதையும் பெளத்த கோயில்கள் கட்டுவதையும் தடுக்க முடியாது போயிற்று.

இராணுவத்திடமோ அரசாங்கத்திடமோ நன்மைகள் பெறும் போது தூர கால சிந்தனையுடன் நடந்து கொள்வதே உசிதம். இல்லை என்றால் நாங்கள் அவர்களின் “அன்பின்” அடிமைகளாக ஆண்டாண்டு தோறும் அவதியுற நேரிடும்.
நான் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் நடந்து கொள்ளும் விதம் பல அரசியல்வாதிகளுக்குப் புரியாத புதிராக இருக்கின்றது. அரசாங்கத்தை அண்டினால் எதையும் பெறலாம் என்று சிலர் நினைக்கின்றார்கள்.
அதன் தாற்பரியத்தை உணராதவர்களாகவே அவர்களைக் காண்கின்றேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் தந்திரோபாயம் வெற்றிபெற்று விட்டது! சீ.வி. விக்னேஸ்வரன் - Reviewed by Author on July 03, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.