இந்தியாவில் ஒரு பெண்ணை கைது செய்ய என்ன நடைமுறை?
சமீபத்தில் இந்தியாவில் அதிகம் கேட்கப்படும் வார்த்தை 'கைது'. ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி, கல்லூரி மாணவி வளர்மதி முதல் தற்போது சமூக செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் வரை பல பெண்கள் கைது செய்யப்பட்டது பலராலும் பேசப்பட்டது.
ஆண்களை கைது செய்வதுபோல அவ்வளவு எளிதாக பெண்களை கைது செய்ய முடியாது. இந்தியாவில் அதற்கென தனி நடைமுறை உண்டு. அதனை பின்பற்றியே பெண்கள் மீதான கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், மாணவி வளர்மதி கேரள மக்களுக்கு உதவ மக்களிடம் பிரசாரம் செய்து நிதி திரட்டிக் கொண்டிருந்தபோது, அதனை தடுத்த போலீஸார் அவரை கைது செய்ததாகவும், பின்னர் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் வளர்மதி குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் சுதா பரத்வாஜ் குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் தவறாக பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஒரு பெண்ணை கைது செய்ய என்ன நடைமுறை? இது முறையாக பின்பற்றப்படுகிறதா?
இதுகுறித்து விளக்குகிறார் செயற்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞருமான கிருபா.
1.மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை ஒரு பெண்ணை கைது செய்ய முடியாது. அதாவது சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு பெண்களை கைது செய்யக்கூடாது.
2.ஒரு பெண்ணை கைது செய்யும்போது, பெண் காவலர் ஒருவர் கட்டாயம் உடனிருக்க வேண்டும்.
3.குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருக்கும் பட்சத்தில், மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு சென்று, பெண்களுக்கான தனி சிறையில்தான் அடைக்க முடியும். பொது சிறையில் அடைக்கக்கூடாது.
4.ஒரு பெண் தவறு செய்ததாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாலும், ஆதாரம் இல்லாத பட்சத்தில் அவரை சிறையில் அடைக்க முடியாது. அரசு காப்பகத்தில்தான் அவரை வைக்க முடியும்
5.அதே போல, மனநிலை சரியில்லை அல்லது வேறு ஏதேனும் தீவிர சூழ்நிலையில், அவரை சிறையில் அடைக்காமல் காப்பகத்தில் வைக்க வேண்டும்.
6.கைது செய்யப்படும் பெண், கர்பமாக இருந்தால், தாய் சேயை காக்க அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
7.அவரது உடலை பரிசோதிக்க வேண்டுமானால், உடலில் ஆயுதங்கள் வைத்துள்ளார்களா என்பதை பெண் காவலர்கள் மட்டுமே பரிசோதிக்க முடியும். தனி அறையில் இது நடத்தப்பட வேண்டும்.
ஆனால், இது போன்று பரிசோதிக்கும் போது, பல பெண் காவலர்களே பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்வதை நாம் கேட்க முடியும் என்று கூறுகிறார் வழக்கறிஞர் கிருபா.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியும் இது போன்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாக செய்திகள் வெளியாகின. இது போன்ற புகார்களை எல்லாம் பெறுவதற்கு ஒரு குழு அல்லது அமைப்பு இருக்க வேண்டும் என்று கூறும் கிருபா, சிறையினுள் இதுபோல ஏதேனும் நடந்தால் புகார் அளிக்க மன்றம் ஒன்று உள்ளதாக குறிப்பிடுகிறார்.
ஆனால் இந்த மன்றம் தீவிரமாக செயல்படுவதில்லை என்று கூறுகிறார்.
சிறையில் இல்லாமல் கைது நடவடிக்கையின் போதோ, காவல் நிலையத்திலோ, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டால், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். அப்படி அவர்கள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாஜிஸ்ட்ரேட்டிடம் இதனை கொண்டு செல்லலாம் என்கிறார் கிருபா.
பெண்களை வீடு புகுந்து எல்லாம் கைது செய்ய முடியாது. முன்கூட்டியே வாரண்ட் வாங்கி சென்றே கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.
முன்னதாக ஆவணப்படம் எடுத்ததற்காக தன்னை கைது செய்தபோது,ஆண் காவலர்கள் மட்டுமே இருந்ததாக கூறுகிறார் இயக்குனர் திவ்ய பாரதி."எனக்கு சட்டம் தெரியும் என்பதனால் பெண் காவலர்கள் ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பினேன்", என்று கூறுகிறார் அவர்.
இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களுக்கு பஞ்சமில்லை என்றும் ஆனால் எதுவும் முறையாக செயல்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் ஒரு பெண்ணை கைது செய்ய என்ன நடைமுறை?
Reviewed by Author
on
September 01, 2018
Rating:
Reviewed by Author
on
September 01, 2018
Rating:


No comments:
Post a Comment