நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முன்வைத்துள்ள கோரிக்கை
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.
இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம். கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய தனது கட்சிக்காரருக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.
இருப்பினும், அமர்வு முறையாக அமைக்கப்படாததால், மறுநாள் இந்தக் கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி சட்டத்தரணியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனுவை வரும் 31-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அரச வைத்தியராக பணியாற்றிக்கொண்டே கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தை மீறியுள்ளதாகவும், அதன்படி, அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கத் தகுதியற்றவர் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
January 15, 2025
Rating:


No comments:
Post a Comment